
கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சின் 7 வது மாடியில் நேற்று திடீரென பற்றிய தீயினால் அமைச்சின் ஊடகப்பிரிவு முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
பொலிஸார் தீயணைப்பு படையினரின் ஒத்துழைப்புடன் குறுகிய நேரத்திற்குள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படாத போதிலும் உடமைகள் நாசமாகியிருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.
சேதமாகிய சொத்துக்களின் விபரம் இதுவரை கணிப்பிடப்படவில்லை. தீ ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஊடகப் பிரிவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அலுவலகம் என்பன தீக்கிரையாகியுள்ள போதும் முக்கியமான ஆவணங்கள் பாதுகாப்பான முறையில் கையிருப்பிலிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊடகப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த நுட்பம் வாய்ந்த கெமரா, வீடியோ பதிவுகள் என்பன எரிந்து சாம்பலாகியுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





