வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குளவிசுட்டான் கிரமமானது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமம் ஆகும். அத்துடன் இக்கிரம மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்ற வேளையில் காட்டு யானைகளின் தாக்கத்தினால் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில் மக்களுக்கு வீடமைப்புக்காக வழங்கப்பட்ட கடனை மீள் செலுத்துவதில் பெரும் சிரமம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நேற்று குளவிசுட்டான் கிராம மக்களினால் வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவிக்கையில்,
தேசிய விடமைப்பு அதிகார சபையினால் 2005ம் ஆண்டு வழங்கப்பட்ட கடனை தமது பொருளாதார நிலைமையில் மீள் செலுத்துவது கடினமானது என்பதை சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் இந்த யுத்தத்தின் பின்னர் மீள்குடியேறிய மக்களின் வீட்டுத்திட்ட தெரிவு விடயத்தில் புறக்கணிக்கப்பட்டமை, காட்டு யானைகளின் தாக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டமை மற்றும் உள்ளுர் வீதி, போக்குவரத்து தொடர்பான பிரச்சனைகளை எமக்கு தெரியப்படுத்தினர்.
இது தொடர்பாக அடுத்து நடைபெற உள்ள மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திலே இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு சம்மந்தப்பட்ட மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் ஆகியோர் பாதிக்கப்பட்ட இம் மக்களின் விடயத்திலே மிகவும் அக்கறையாக நடந்த கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.






