
தமிழகத்தின் கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சதாசிவம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
இதில் மாவட்ட துணை பொதுச் செயலாளர் ரஞ்சித்குமார், இளைஞர் அணி தலைவர் தேவா, புதுச்சேரி மாநில தலைவர் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..
கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் உரிமையை நிலை நாட்டும் வகையில் வருகிற 15ம் திகதி அங்கு தேசிய கொடியை ஏற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கச்சத்தீவு ஒப்பந்தப்படி அங்கு தமிழக மீனவர்கள் ஓய்வெடுக்கவும், மீன் பிடிக்கவும், மதவிழாக்கள் நடத்தவும் தடையில்லை. அப்படி இருந்த பின்னரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி வருகின்றனர்.
கச்சத்தீவை மீட்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கு வலு சேர்க்கும் வகையில் கச்சத்தீவில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.
தவறினால் ஒத்தகருத்துடைய அமைப்புகளுடன் சேர்ந்து இந்து மக்கள் கட்சியானது அங்கு தேசிய கொடியை ஏற்றும். கச்சத்தீவில் அந்தோணியார் கோவிலில் திருவிழா நடத்த அனுமதிக்கப்படுவதுபோல், விநாயகர் சதுர்த்தி விழா நடத்த இந்து மீனவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி பிரதமராக வர வேண்டும் என்று எந்த கட்சி விரும்புகிறதோ அந்த கட்சியுடன் கூட்டணியை வைத்துக்கொள்வோம். நரேந்திரமோடியை விஜயகாந்த் ஆதரிக்க வேண்டும். அப்படி ஆதரித்தால் அவருக்கு தமிழ்நாட்டில் எதிர்காலம் நன்றாக இருக்கும்.





