இந்திய ரூபாவின் மதிப்பு குறைவடைந்து வருவதால் இலங்கையிலிருந்து சட்டவிரோத தங்கக் கடத்தல் அதிகரிப்பு!!

571

Gold

இந்திய ரூபாவின் மதிப்பு குறைந்துள்ளதால் இலங்கையைவிட இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தும் செயல்களும் அதிகரித்துள்ளன.

சுங்கத் தீர்வை கட்டளைச் சட்டத்தின் இறக்குமதித் தீர்வைகள் தொடர்பான. தீர்மானம் அங்கீகரிக்கப்படுவதற்கான பிரேரணையை சமர்பித்து பேசும் போதே அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது சந்தையில் தங்கத்தின் விலை பவுண் ஒன்று 40,000 ரூபா விலையில் குறைவடைந்துள்ளது. இதனை கவனத்தில் கொண்டே உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலையை நிலையாக தக்கவைத்துக் கொள்வதற்காக 5 வீத இறக்குமதி வரி அறவிடப்பட்டது.

இந்த 5 வீத இறக்குமதி வரிக்கு 100 வீத மேலதிக வரி இடப்படுகிறது. அதாவது தங்கத்துக்கு 2013 ஜூன் 21 ம் திகதி முதல் 10 வீத வரி அமுல்படுத்தப்படுகிறது. 2011ம் ஆண்டு உலக சந்தையில் வெகுவாக தங்கத்தின் விலை குறைந்தது. 2011ல் ஒரு ட்ரோய் அவுன்ஸ் தங்கம் 1900 அமெரிக்க டொலர்களாக இருந்தது. அது பின்னர் 1300 டொலராக குறைவடைந்தது.

இது 30 வீத குறைவாகும். எமது நாட்டின் உள்ளூர் சந்தையில் 15 வீதம் குறைவடைந்தது. இந்த நிலை காரணமாக 2012ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தங்கம் இறக்குமதிக்காக செலவிடப்பட்ட 136.2 மில்லியன் டொலர்கள் 2013 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை ஒப்பிடும் போது 200.3 மில்லியன் டொலர்களாக 50 வீத அதிகரிப்பு ஏற்பட்டது.

தங்கத்தின் விலை உலக சந்தையில் அதிகரித்தால் எமது இறக்குமதி செலவில் அதிகரிக்கவும் நேரடியாக வழிவகுக்கிறது. மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றுமொரு விடயமும் உள்ளது.
உலகில் அதிகளவு தங்கத்தை நுகரும் மக்கள் இருக்கும் நாடாக கருதப்படும் இந்தியாவில் அந்நாட்டு ரூபாவின் மதிப்பும் இப்போது வெகுவாக குறைந்து வருகிறது.

இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை இலங்கையைவிட அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே இலங்கையிலிருந்து தங்கத்தை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது.
தங்கம் இன்று மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

நிதி நிறுவனங்கள், வர்த்தக வங்கிகள் அடகு நிலையங்களில் மக்கள் தங்கத்தை அடகு வைத்து தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். 2013 ம் ஆண்டு மே மாதம் வரையில் 633 பில்லியன் ரூபாவுக்கு தங்கம் அடகு வைக்கப்பட்டுள்ளது. வர்த்தக வங்கிகளில் 590 பில்லியன் ரூபாவும், நிதி நிறுவனங்களில் 32 பில்லியன் ரூபாவும், அடகு நிலையங்களில் 11 மில்லியன் ரூபாவுமாக அடகு வைக்கப்பட்டுள்ளது.