கறுப்புத் தேயிலை உற்பத்தியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்..!

532

blackteaஇந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலத்தில், உலக அளவில், கறுப்பு தேயிலை உற்பத்தி, 88 கோடி கிலோவாக அதிகரித்து உள்ளது.

இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (80 கோடி கிலோ) விட, 9.90 சதவீதம் அதிகமாகும் என, சர்வதேச ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கறுப்பு தேயிலை உற்பத்தியில், இந்தியா முன்னிலை வகிக்கிறது. கணக்கீட்டு காலத்தில், இந்தியாவின் கறுப்பு தேயிலை உற்பத்தி, 1.18 கோடி கிலோ அதிகரித்து, 39.17 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.

இந்தியாவிற்கு அடுத்தபடியாக, கறுப்பு தேயிலை உற்பத்தியில் கென்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நாட்டின் கறுப்பு தேயிலை உற்பத்தி, கணக்கீட்டு காலத்தில், 6.74 கோடி கிலோ அதிகரித்து, 22.56 கோடி கிலோவாக வளர்ச்சி கண்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இலங்கையின் கறுப்பு தேயிலை உற்பத்தி, 80.30 லட்சம் கிலோ உயர்ந்து, 17.23 கோடி கிலோவாக அதிகரித்து உள்ளது.

அதேசமயம், மாலவி நாட்டின் கறுப்பு தேயிலை உற்பத்தி, 17.30 லட்சம் கிலோ குறைந்து, 3.02 கோடி கிலோவாக குறைந்துள்ளது.

பங்களாதேசத்தில் இதன் உற்பத்தி, கணக்கீட்டு காலத்தில், 1.40 லட்சம் கிலோ குறைந்து, 1.52 கோடி கிலோவாக சரிவடைந்து உள்ளது.

உகாண்டா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில், கறுப்பு தேயிலை உற்பத்தி குறைந்தும், தான்சானியாவில் இதன் உற்பத்தி அதிகரித்தும் இருந்தது என, இப்புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.