தமிழகத்தின் அன்பும் அரவணைப்பும் ஈழத்தமிழருக்கு எப்போதும் அவசியம் : நீதிபதி இளஞ்செழியன்!!

1235

Ilancheliyan

தமிழக அரசியல் எமக்கு அவசியமில்லை. ஆனால் தமிழக மக்களின் அன்பும் – ஆதரவும் – அரவணைப்பும் எப்போதும் எமக்கு அவசியம் என்று தெரிவித்தார் யாழ்மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.

வவுனியாவில் முன்தினம் நடைபெற்ற அனைத்துலக 14வது ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தொடர்ந்து தெரிவிக்கையில்..

தமிழ்நாட்டு தமிழ்மொழியை செம்மொழி என்பார்கள். எங்கள் நாட்டு தமிழை செந்தமிழ் என்பார்கள். இலங்கைத் தமிழ் உச்சரிப்பு உரைநடை வேறு எங்கும் இல்லாதது மிகவும் வித்தியாசமானது. ஒரு காலத்தில் தமிழகத்தில் உள்ளவர்கள் இலங்கை வானொலியைக் கேட்பார்கள். கே.எஸ்.ராஜா அப்துல் ஹமீட் ஆகியோரின் உரையை கேட்பார்கள்.

போரின் போது நாம் அழுதபோது தமிழகம் அரவணைத்து உணவு தந்தது. பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு அனுமதி தந்தது. தமிழகத்தின் அரசியல் எமக்கு அவசியமில்லை. ஆனால் தமிழக மக்களின் அன்பும் – ஆதரவும் – அரவணைப்பும் எப்போதும் எமக்கு அவசியம். எங்களுக்கு தொப்புள் கொடி உறவுகள் தான் முக்கியம்.

தமிழக மக்கள் – வடக்கு,கிழக்கு மக்களின் எதிர்காலத்துக்கு வழிகாட்ட வேண்டும். முன்பைப் போன்று பல்கலைக்கழக அனுமதி எமது தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும். எங்களுடைய கல்விக்கு உதவி செய்ய வேண்டும். போரின்போது எமக்கு எவ்வாறு உதவி செய்தார்களோ அதேபோன்று ஆதரவு தரவேண்டும்.

எங்களுடைய தேச வழமைச் சட்டத்துக்கும், இந்தியாவின் மலபார் (மலையாள தேசத்துக்கும்) தொடர்பு உண்டு. தமிழகத்தின் கன்னியாகுமாரி மாவட்டத்துக்கும் எமது யாழ்ப்பாண மக்களுக்கும் இடையில் தொடர்புகள் இருந்திருக்கின்றன. எமது உறவுகள் தொடர்ந்து இருக்க வேண்டும். பாரதியின் கருத்துக்கு ஏற்ப தமிழ் எங்கும் ஒலிக்க வேண்டும். தமிழனை இலங்கை பார்த்துக் கொள்ளட்டும். தமிழ் மொழியை தமிழ் நாடு பார்த்துக் கொள்ளட்டும் என்று தெரிவித்தார்.