வன்னி குறோஸ் கலாச்சார பேரவை பெருமையுடன் நடாத்திய மாபெரும் முத்தமிழ் விழா நேற்று (28.05.2016) சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில் இருந்து நள்ளிரவு வரை புதுக்குடியிருப்பு நகரில் பாரம்பரிய கலாச்சார கலைஞர்களினால் சிறப்பாக நடைபெற்றது.
ஒரே மேடையில் வன்னியின் தெரிவு செய்யப்பட்ட பாரம்பரிய கலைப்படைப்புக்களின் சங்கமமாக காத்தவராயன் சிந்துநடைக்கூத்து, கோவலன் கூத்து, அரிச்சந்திர மயான காண்டம், பண்டாரவன்னியன், சமூக நாடகம் என்பன சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.
நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரபல திரைப்பட நடிகர் நாசார் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைக்கு முத்தமிழ் விழாவிற்காக வருகை தந்தமை மற்றும் தமிழ் மக்களைச் சந்திக்கக்கிடைத்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும், முத்தமிழ் விழாவின் நிகழ்வுகள் யாவும் சிறப்பாக நடைபெற்றதாகவும், கலந்துகொண்ட கலைஞர்கள், பொதுமக்கள், ஏற்பாட்டாளர்கள் என அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும்,
இதேவேளை தென்னிந்திய குணச்சித்திர திரைப்பட நடிகர் மு.சண்முகராஜன் கருத்துத்தெரிவிக்கையில், இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டமையை முன்னிட்டு மிகவும் சந்தோஷமடைவதாகவும், இதுபோன்ற நிகழ்வுகளை நான் பார்க்கவில்லை. கலைஞர்கள் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.
இந்நிகழ்வுகள் வைத்திய கலாநிதியும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முல்லை மாவட்ட இணைத் தலைவருமான சி.சிவமோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதோடு, நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக நாசார் (பிரபல திரைப்பட நடிகர், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் மற்றும் பாரம்பரிய நாட்டு கூத்து கலைஞர்), திரு.மு.சண்முகராசா (தென்னிந்திய குணச்சித்திர திரைப்பட நடிகர், நிகழ்நாடக மன்ற கூத்துபட்டடை நிறுவனர்),
இரா.சம்பந்தன் (பாராளுமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சித்தலைவர், தலைவர்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு), சோ.மாவை சேனாதிராஜா (பாராளுமன்ற உறுப்பினர், தலைவர்-இலங்கை தமிழரசு கட்சி), திரு.எஸ்.இராமசுப்ரமணியன் (தலைவர் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் – ஆகாஷ் குறூப்), வடமாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள், அரச அதிபர், வலயக்கல்விப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், சமூக அமைப்புக்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டதோடு சுமார் 8000 இற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டதாக ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.























