மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
வெல்லாவெளி வெள்ளப்பாலம் அருகில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் நற்பிட்டிமுனையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது நற்பிட்டிமுனையை சேர்ந்த முகம்மது நவாஸ் (26வயது) என்பவரே உயிரிழந்ததாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
நெல்அறுவடை செய்யும் இயந்திரத்துடன் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் நெல்அறுவடை செய்யும் இயந்திரத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் நெல்அறுவடை செய்யும் இயந்திரமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று பிற்பகல் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
மண்டூரில் இருந்துவந்த முச்சக்கரவண்டியும் களுவாஞ்சிகுடியில் இருந்துசென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவரும் முச்சக்கர வண்டியில் சென்றவர்களுமாக மூன்று பேர் காயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





