பாகிஸ்தானின் மதச்சார்பற்ற பெண் அரசியல்வாதிகளில் ஒருவரான நஜ்மா ஹனிப் (35) தீவிரவாதிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தலிபான்கள் ஆட்சி நடத்தியபோது, கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அவர்களது இராணுவ நடவடிக்கையை அவாமி நேஷனல் பரி என்ற கட்சி வெளிப்படையாக விமர்சனம் செய்தது.
அந்த கட்சியின் மூத்த உறுப்பினர் நஜ்மா ஹனிப். பாகிஸ்தானின் மதச்சார்பற்ற பெண் அரசியல்வாதிகளில் ஒருவரான இவர் பாகிஸ்தானின் பிரச்சினைக்குரிய வடமேற்குப் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு ஹனின் தனது வீட்டில் இருந்தபோது, ஆயுதமேந்திய கும்பல் ஒன்று அவரது வீட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளது.
சைலன்சர் பொருத்திய துப்பாக்கியால் அவர்கள் சுட்டதில் ஹனிப் இறந்தார். ஒன்று அல்லது இரண்டு பேர் வீட்டின் உள்ளே புகுந்து அவரை சுட்டிருக்கவேண்டும் என்று மூத்த பொலிஸ் அதிகாரி முகமது பைசல் தெரிவித்தார்.
இந்த கொலைக்கான காரணம் சரிவரத் தெரியவில்லை. கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பரில் ஹனிபின் கணவர், மகன் மற்றும் அவர்களது பாதுகாவலர் ஆகியோர் தலிபானின் வெடிகுண்டு தற்கொலைப்படை வீரன் ஒருவனால் கொல்லப்பட்டனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சமீபத்தில் நடந்த தேர்தல்கள் வரை அவாமி கட்சி, ஆளும் கூட்டணியில் இருந்தது. இந்தக் கட்சியின் செயல்வீரர்கள் பலரும் தலிபான்களின் தாக்குதல்களுக்கு ஆளானார்கள். கடந்த மே மாதத் தேர்தலின்போது இந்தத் தாக்குதல்கள் அதிகரித்துக் காணப்பட்டன.
தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்நாள் அரசியல்வாதியுமான இம்ரான்கானின் கட்சி, இந்த மாகாணத்தில் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இருந்தபோதிலும் அவாமி கட்சியின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.





