இலங்கையின் எந்தப் பகுதிக்கும் சென்றுவர நவநீதம்பிள்ளைக்கு அனுமதி..!

358

navaneethamஇலங்கை வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளைக்கு சுதந்திரமாக நாட்டின் எப்பிரதேசத்திற்கும் சென்றுவர வாய்ப்பளிக்கப்படும்.

இலங்கை தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நேரில் உண்மை நிலைமையை அறிய அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார்.

நாட்டிலிருந்து திரும்பிச் செல்வதற்கு முன்னர் இங்குள்ள உண்மை நிலை தொடர்பாக நியாயமான கருத்தை அவர் வெளியிடுவார் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐ. ம. சு. மு. ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் குறித்தும் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்கும் எனவும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-

ஐ. நா. உயர் பதவி வகிக்கும் தலைவியான நவநீதம்பிள்ளைக்கு இலங்கை வருகை தருமாறு 2 வருடங்களுக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே அவர் இங்கு வருகை தருகிறார்.

இவருக்கு முன்னர் இருந்த ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் லுயிஸ் ஆபர் இலங்கைக்கு விஜயம் செய்தார். அவர் வரும் முன்னரும் இலங்கை குறித்து பல குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், அவர் இலங்கையை விட்டும் செல்கையில் உண்மை நிலையை வெளிப்படையாக குறிப்பிட்டார்.

எமது அழைப்பை ஏற்று நவநீதம்பிள்ளை இங்கு வருகை தந்ததை வரவேற்கிறோம்.

யாழ்ப்பாணமோ, வெலிவேரியாவோ எப்பகுதிக்கும் நேரில் சென்று வர அவருக்கு தடை கிடையாது. நாட்டின் உண்மை நிலையை நேரில் காண வருகை தந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்.

அவர் தனது விஜயம் முடிவடைந்து திரும்பிச் செல்வதற்கு முன்னர் நேரில் கண்ட விடயங்கள் தொடர்பில் உண்மை நிலையை நியாயமாக வெளியிடுவார் என நம்புகிறோம் என்றார்.