ஜ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் யாழ்.மாவட்டத்திற்கு எதிர்வரும் 27ம் திகதி வருகைதரவுள்ள நிலையில் ஐ.நாடுகள் சபையின் யாழ்.அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக காணாமல்போனவர்களின் உறவுகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டும், யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயமும் காணாமல்போன உறவுகள் எங்கிருக்கின்றார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது, என வெளிப்படுத்த வலியுறுத்தியும், யுத்தத்தின் பின்னர் வடக்கு மாகாணத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில ஆக்கிரமிப்பு மற்றும் மீள்குடியேற்றப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் எனக்கோரியும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் 27ம் திகதி காலை 9மணி தொடக்கம் 11மணிவரையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியவாறு மிகவும் அமைதியான முறையில் போராட்டம் நடைபெறவுள்ளதுடன், போராட்டத்தின் நிறைவில் மனிதவுரிமைகள் ஆணையாளரை 15பேர் கொண்ட குழுவினர் சந்திக்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,
அதன்போது 13அம்சக் கோரிக்கையடங்கிய மகஜர் கையளிக்கப்படவுள்ளதாகவும், தெரிவிக்கப்படுவதுடன், மகஜர் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் போராட்டத்திற்கு மனிதவுரிமை செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கும் பொது அமைப்புக்கள், மற்றும் சமுக அமைப்புக்கள் ஆதரவு வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோன்று எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலிருந்து 50 பேர் கொண்ட குழுவினர் கொழும்பு சென்று அங்கும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.