ஈராக்கில் 17 கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்..!

552

hangஈராக் நாட்டின் சிறைக்கைதிகளில் 17 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக நேற்று அந்நாட்டின் அரசு செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. மரண தண்டனையை ரத்து செய்யுமாறு சர்வதேச மனித உரிமைக் கழகங்களின் தொடர் வேண்டுதலையும் ஒதுக்கிவிட்டு ஈராக் இந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

அரசு இணையதளத்தில் நீதித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈராக் நாட்டவர் 15 பேருக்கும், எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மக்களுக்கு எதிரான தீவிரவாதக் குற்றங்களுக்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டதாக நீதித்துறை குறிப்பிட்டுள்ளது.

மற்றொரு குற்றவாளியும் குறிப்பிடப்படாத குற்றங்களுக்காக தூக்கு தண்டனையைப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் இருவர் பெண்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்த செய்தியில் தண்டனை நிறைவேற்றப்பட்ட காலத்தினைப் பற்றிய தகவல் தரப்படவில்லை. இந்தத் தீர்ப்பினையும் சேர்த்து இதுவரை, இந்த வருடத்தில் மட்டும் மொத்தம் 67 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2003 ஆம் ஆண்டில்,ஈராக்கின் அதிபர் சதாம் ஹுசைன் அமெரிக்க படைகளின் உதவியுடன் பதவி இறக்கம் செய்யப்பட்டபின், அந்நாட்டில் மரணதண்டனைகள் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், 2004ஆம் ஆண்டு மாற்று அரசாங்கம் அமைந்ததிலிருந்து மீண்டும் இத்தகைய தீர்ப்புகளை நிறைவேற்றுவதில் ஈராக் அரசு தீவிரம் காட்டி வருகின்றது.

லண்டனை மையமாகக் கொண்டு இயங்கிவரும் பொது மன்னிப்பு சபையின் கருத்துப்படி, மரண தண்டனைகளை நிறைவேற்றுவதில் ஈராக் உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. சீனா, ஈரான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கின்றன. குற்றவாளிகளுக்கு நியாமான தீர்ப்பு வழங்கப்படுகின்றதா என்பது குறித்து அமெரிக்காவின் மனித உரிமைக் கழகமும் கேள்வி எழுப்பியுள்ளது.