எந்த அணியில் விளையாடுவது எனும் தெரிவு வீரர்களுக்குக் கிடையாது – சங்கக்கார..!

339

sangaசம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடரில் இந்தியன் பிறீமியர் லீக் அணியிலா அல்லது தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியையா பிரதிநிதித்துவப்படுத்துவது என்ற தெரிவு வீரர்களுக்குக் கிடையாது என இலங்கை அணியின் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடரில் குமார் சங்கக்கார பங்குபற்றிய இரண்டு அணிகளான சண் றைசர்ஸ் ஹைதராபாத், கந்துரட்ட அணி ஆகியன தகுதிபெற்றுள்ளன.

இதில் எந்த அணியில் குமார் சங்கக்கார பங்குபற்றுவார் என்ற சந்தேகம் காணப்படும் நிலையில், இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த குமார் சங்கக்கார, இது தொடர்பான முடிவை எடுக்கும் தெரிவு வீரர்களுக்குக் கிடையாது எனக் குறிப்பிட்டார்.

இந்தியன் பிறீமியர் லீக் ஒப்பந்தத்தின் படி சம்பியன்ஸ் லீக் தொடருக்கு வீரரொருவரின் இரண்டு அணிகள் தகுதிபெற்றால், அந்த வீரரினைத் தெரிவுசெய்யும் முதன்மைத் தெரிவு ஐ.பி.எல் அணிக்கே காணப்படும். இதனடிப்படையில் குமார் சங்கக்கார தொடர்பான தெரிவை சண் றைசர்ஸ் ஹைதராபாத் அணியே எடுக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

குமார் சங்கக்காரவை சண் றைசர்ஸ் அணி தெரிவு செய்தால் அவ்வணி சார்பாக குமார் சங்கக்கார பங்குபற்றுவார் என்பதோடு, கந்துரட்ட அணிக்கு 150,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் அவ்வணியால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.