தொண்டமான் – திகாம்பரம் ஆதரவாளர்களிடையே மீண்டும் மோதல்..!

413

partyஹட்டன் நகரத்திலுள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதான காரியாலயம் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத சிலரால் தாக்குதலுக்கு உள்ளானதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

அந்த குழுத் தாக்குதலின் போது, சுமார் 200 பேர் வரை கலகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதுடன், காரியாலத்தின் உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

கலகத்தடுப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் இடம்பெற்ற வேளையில் 2 பொலிஸார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதான காரியாலயத்தின் பாதுகாப்பு கடமையில் இருந்துள்ளனர்.

இதுதவிர, கொட்டகலையில் உள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் வேட்பாளர் ஒருவரது வீடும் தாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று அதிகாலை பொகவந்தலாவையில் உள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் காரியாலயமும் ஒரு கும்பலாம் தாக்கப்பட்டதாக அந்த கட்சி சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, நேற்று ஹட்டன் – திம்புலபத்தனை – கொமர்சல் பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றது.

குறித்த மோதல் நிலை தொடர்பாக இரண்டு தரப்பினரிடமிருந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றைய சம்பவத்தில் 14 வாகனங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்தசம்பவத்திற்கு பின்னர் நேற்றிரவு 9 மணியளவிலும் தமது காரியாலயத்திற்கு சிலர் தாக்குதல் மேற்கொண்டு சேதம் ஏற்படுத்தியதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த சம்பவங்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உடமைகள் மற்றும் சில வாகனங்களும் தாக்குதல்களுக்கு உள்ளானதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.