பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த ராகுல் டிராவிட் ஆதரவு..!

347

cricketT20 கிரிக்கெட் போட்டியால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இழந்து வருகிறது. டெஸ்ட் போட்டிக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை அதிகரிக்க செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பகல்-இரவாக (மின்னொளியில்) டெஸ்ட் போட்டியை நடத்த ஐ.சி.சி. கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. ஆனால் சில நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டி, எந்த அணியும் பகல்-இரவாக டெஸ்ட் போட்டியை நடத்த முன்வரவில்லை.

இந்த நிலையில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று இந்திய முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் வலியுறுத்தியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும் போது தெரிவித்ததாவது,

டெஸ்ட் கிரிக்கெட்டை பகல்-இரவு போட்டியாக நடத்த திறந்த மனதுடன் முயற்சிக்க வேண்டும். மின்னொளியின் கீழ் டெஸ்ட் போட்டி நடப்பதால், அதன் பாரம்பரிய தன்மைக்கு எந்த அச்சுறுதலும் வராது.

இந்த போட்டிகளில் ‘பிங்க்’ நிற பந்துகளை பயன்படுத்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ‘பிங்க்’ நிற பந்துகளில் விளையாடுகையில் பிரச்சினை இருப்பதாக ஒரு தரப்பினர் கூறுவதை அறிவேன்.‘பிங்க்’ நிற பந்தில் விளையாடிய அனுபவம் எனக்கு கொஞ்சம் உண்டு. எம்.சி.சி. அணிக்காக பிங்க் நிற பந்துகளில் ஆடிய போது, அதை எதிர்கொண்டு ஆடுவதில் எந்த பிரச்சினையும் இருப்பது போல் தெரியவில்லை.

இதே போல் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் விளையாடும் போது பனியின் தாக்கம் இருக்கலாம். சரியான காலத்தில், சரியான இடத்தில் போட்டி அட்டவணையை அமைத்தால் இரவில் பனிப்பொழிவு பிரச்சினையை தவிர்த்து விடலாம். ரசிகர்களின் கூட்டத்தை ஈர்க்க பகல்-இரவு டெஸ்ட் போட்டி அவசியமாகும்.

காலத்திற்கு தகுந்தாற் போல் மாற்றங்கள் என்பது 20 ஓவர் கிரிக்கெட்டை மட்டும் பிரபலப்படுத்த வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் மாற்றம் தேவை. இங்கிலாந்தில் நீண்ட காலம் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கூட சில மாற்றங்கள் வந்திருக்கிறது.

முன்பு போல் இல்லாமல் ஆட்டம் பாதிக்கப்படுவதை தவிர்க்க விம்பிள்டனில் மேற்கூரை கொண்ட ஸ்டேடியம் பயன்படுத்தப்படுவதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

எனவே பகல்-இரவு டெஸ்ட் போட்டியை சீக்கிரம் நடத்துவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என டிராவிட் கூறினார்.

சுற்றுப்பயணங்களின் போது, 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்காக, டெஸ்ட் எண்ணிக்கையை குறைத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடராக நடத்தப்படுவதற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.