சூடானில் பயங்கர மழை 53 பேர் நீரில் மூழ்கி பலி!!

383

sudan

சூடான் நாட்டில் பெய்து வரும் கன மழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. 3 லட்சம் பேர் தங்கள் உடமைகளை இழந்து தவிக்கின்றனர்.

மழையால் இதுவரை 53 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. சூடானில் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக கர்டோம் மாகாணத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள நைல் நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது. கர்டோம் கிழக்கு பகுதியில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். வெள்ளத்தால் 3 லட்சத்து 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் இப்ராகிம் முகமது ஹமீது கூறுகையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணி துரிதமாக நடந்து வருகிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை மழையால் 53 பேர் இறந்துள்ளனர் என்றார்.