அரசியலாகும் யாழ் பல்கலைக்கழக மாணவர் விவகாரம்!!

369

Inthirarasa

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்தேறிய சம்பவங்கள் சமாதானத்தை நேசிக்கும் அனைவருக்கும் கவலை தரக்கூடியவை. சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அவாவிநிற்கும் நிலையில் உயர்கல்விப் பீடத்தில் நடைபெற்ற இந் நிகழ்வு சந்தோசம் தரக்கூடியதல்ல வெட்கப்படவேண்டியவை.

ஆனால் தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகமான சக்திகளுக்குத் தீனி போடக்கூடியது. பல்கலைக் கழகங்களில் நடைபெற்ற இவ்வாறான சம்பவங்கள் முதல் முறையானவையல்ல.

தென்னிலங்கையில் தமிழ் மாணவர்களுக்கெதிராக பல்வேறு சம்பவங்கள் நடந்தேறியிருந்தன. அதற்கு இத்தகைய முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கவில்லை. அதற்காக இதனையாரும் நியாயப்படுத்த முடியாது.

1977ல் தென்னிலங்கையில் தமிழர்களுக்கெதிராக இனவாத செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது இங்கிருந்த சிங்கள மாணவர்கள் ஒரு கீறலுமின்றி தென்னிலங்கைக்கு அனுப்பிவைத்த பெருமை இப் பல்கலைக்கழக சமூகத்தினருக்குண்டு.

பழையன கழிதலும் புதியன புகுதலும் தொல்லியல் மரபு. பன்மைச் சமூகத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்புடனும் கலாச்சார பாரம்பரியங்களை பரஸ்பரம் புரிந்து மதித்து ஏற்றுக்கொள்வதன் மூலமே நல்லிணக்க சமூகம் ஒன்றை கட்டியெழுப்ப முடியும்.

மாணவ சக்தி மகத்தான சக்தி என்பதனை புரிந்து கொண்டு நல்லிணக்க சமூகத்தின் பங்காளிகளாகவும் பயிற்றுவிப்பாளர்களாகவும் புடம்போடப்படல் வேண்டும். மாறாக இதனை ஒரு இனப்பிரச்சினையாக க் காட்டி அரசியல் ஆதாயம் தேடும் இனவாதிகளின் வேசத்தை புரிந்து கொண்டு இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப சகலரும் பாடுபடவேண்டும்.

பல்கலைகழகத்திற்குள் மட்டுமல்ல தேசிய ரீதியாக செயற்பாடுகளை உளப்பூர்வமாக செயற்படுத்தப்படல் வேண்டும். அதனை விடுத்து வடக்கு கிழக்கில் பெரும்பான்மை மக்களின் அத்துமீறிய சட்டரீதியற்ற செயற்பாடுகள் -குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலை அமைத்தல் போன்றன அரசினதும் படையினரதும் ஆசிர்வாதத்துடன் தொடர்ந்தும் நடைபெறுவது சிறுபான்மை மக்களின் மனதில் கலக்கம் ஏற்பட வழிசமைக்குமேயன்றி சமாதானத்திற்கான திறவுகோலாக அமையாது என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இ.இந்திரராசா
வடக்கு மாகாண சபை உறுப்பினர்.