கட்டாரில் தமிழர்கள் இருவருக்கு மரண தண்டனை : மேன்முறையீடு செய்துள்ள இந்தியா!!

476

Quatar

தமிழர்கள் இருவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதி மன்றத்தில் இந்திய அரசாங்கம் மேன் முறையீடு செய்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிசெய்துள்ளது. பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2012ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த மூவரை கட்டார் நாட்டு பொலிஸார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அழகப்பா சுப்பிரமணி, விருதுநகரைச் சேர்ந்த செல்லத்துரை பெருமாள் மற்றும் சேலத்தைச் சேர்ந்த சிவக்குமார் அரசன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும், மரண தண்டனை விதித்து கட்டார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து கட்டார் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் மூவரும் மேன் முறையீடு செய்தனர்.

இதில் சிவக்குமார் அரசனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

மற்றைய இருவருக்கும் மரண தண்டனையை உறுதி செய்து கட்டார் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இரண்டு தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு மேன் முறையீடு செய்துள்ளது.

இதனை இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது. அவர்களுக்கு சட்ட ரீதியாக உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.