மாட்டின் உயிரைக் காப்பாற்றப்போய் குட்டையில் மூழ்கிய 3 பள்ளி மாணவிகள் பரிதாப மரணம்!!

839

kuttai

காஞ்சிபுரம் அருகே மாட்டின் உயிரைக் காப்பாற்றுவதற்காக குட்டையில் இறங்கிய 3 மாணவிகள் நீரில் மூழ்கி பரிதாபமாகப் பலியானார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தனலட்சுமி (14), ஷாலினி ( 14) மற்றும் அஜிதா (12).

இதில் முறையே தனலட்சுமியும், ஷாலினியும் 9ம் வகுப்பும், அஜிதா 7ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று விடுமுறை தினமாததால் மூவரும் அருகில் உள்ள பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மேய்த்து வந்த மாடு ஒன்று அருகிலிருந்த குட்டைக்குள் இறங்குவதைக் கண்டுள்ளனர்.

உடனடியாக மாடு நீரில் மூழ்கி விடாமல் வெளியே விரட்டுவதற்காக ஒருவர் பின் ஒருவராக குட்டையில் இறங்கியுள்ளனர். மூவருக்குமே நீச்சல் தெரியாத காரணாத்தால் பரிதாபமாக மூவரும் நீரில் மூழ்கிப் பலியானார்கள்.

சிறுமிகள் மூவரும் நீரில் தத்தளிப்பதைக் கண்ட அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த மற்றொரு சிறுவன் ஊருக்குள் சென்று தகவல் கூறியுள்ளான். ஆனால், ஊர்மக்கள் வருவதற்குள் சிறுமிகள் உயிரிழந்ததால் அவர்களால் சிறுமிகளின் உயிரற்ற சடலத்தை மட்டுமே மீட்க முடிந்தது.

தற்போது அச்சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரே ஊரைச் சேர்ந்த 3 சிறுமிகள் குட்டையில் மூழ்கி பலியான சம்பவத்தால் ஆண்டி சிறுவள்ளூர் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.