பகிடிவதைக்கு உள்ளான ஆறாம் வகுப்பு மாணவி!!

411

Raggin

ஆறாம் தரத்திற்கு புதிதாக சேர்ந்த மாணவியொருவரை அந்த வகுப்பிலிருந்த பழைய மாணவிகள் பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தெவனகல, கன்துன பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவியொருவர் குறித்த பாடசாலையில் சேர்ந்திருக்கிறார்.

அவரைப் பகிடிவதை செய்யும் நோக்கில் பழைய மாணவிகளில் ஒருசிலர் அவரது பாடசாலை சீருடையை கிழித்து வகுப்பறை மண்டபத்தைச் சுற்றிவரச் செய்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியைகள் வினவியபோது, பல்கலைக்கழகங்களில் நடக்கின்ற பகிடிவதைகளுக்கு இப்போதே ஒத்திகை பார்த்ததாக குறித்த மாணவிகள் தெரிவித்ததாக அறியமுடிகின்றது.

இந்த வகுப்பிலுள்ள மாணவியொருவரின் சகோதரன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருப்பதாகவும், அவர் விடுமுறையில் வரும்போது அங்கு நடக்கும் பகிடிவதைகள் பற்றி கதை கதையாகக் கூறுவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த விடயத்தினை சக மாணவிகளிடம் பகிர்ந்துகொண்டபோது அவர்களுக்கும் இந்தப் பகிடிவதை ஆசை வந்ததாக அறியமுடிகின்றது.

பகிடிவதையால் பயந்துபோய் புதிய மாணவி பாடசாலைக்குப் போக மறுப்பு தெரிவித்ததை அடுத்து பெற்றோர்கள் பாடசாலை அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவிகளின் பெற்றோர்களையும் பாடசாலைக்கு வரவழைத்த அதிபர் இவ்வாறான செயல்கள் மீண்டும் நடக்காமல் இருக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, புதிய மாணவி தற்போது மீண்டும் குறித்த பாடசாலைக்கு செல்வதாகக் தெரிவிக்கப்படுகின்றது.