செப்டெம்பர் 3 வரை செந்தூரனை நாடு கடத்த முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்!!

423

Madras-High-Court

சென்னை உயர் நீதிமன்றில் பம்மலைச் சேர்ந்த ஆர்.செந்தூரன் (32) தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கையில் நடந்த இனப் பிரச்சனையை அடுத்து அகதியாக நான் இந்தியாவுக்கு 11.4.11 அன்று வந்தேன். 14.7.11 அன்று கியூ பிரிவு பொலிஸார் என்னை கைது செய்து செங்கல்பட்டு முகாமில் அடைத்தனர். பின்னர் தேவகோட்டை அருகே தாழையூரில் உள்ள முகாமில் என்னை அடைக்க உத்தரவிடப்பட்டது.

தேவகோட்டை தாசில்தாரின் அனுமதி பெற்று எனது மனைவி மற்றும் குழந்தைகளை சந்திப்பதற்கு சென்னைக்கு வந்தேன். அவரது அனுமதி பெற்று சென்னையில் வாடகை வீட்டில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன்.

என்னையும், மேலும் இரண்டு பேரையும் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு 19ம் திகதி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. கருத்து கூறுவதற்கு எனக்கு வாய்ப்பு தராமலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு என்னை கொன்றுவிடுவார்கள். எனவே என்னை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோர் கடந்த வாரம் விசாரித்தனர். மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன் ஆஜராகி ‘‘இந்தியாவுக்குள் மனுதாரர் நுழைந்ததே சட்டவிரோதம் அப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கத் தேவையில்லை” என்று வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள் ‘‘இதுபோல் ஈழநேரு தாக்கல் செய்த மனு மீது தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். செந்தூரன் வழக்கிலும் அதே உத்தரவை பிறப்பிக்கிறோம்” என்று கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை செந்தூரனின் மனு விசாரணைக்கு வந்தது. செந்தூரனை நாடு கடத்துவதற்கு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு 3ம் திகதிவரை நீட்டிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.