கர்நாடக மாநிலம் பீதரைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவி தன்னைத் துன்புறுத்துவதாகவும், அவரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து தனது கடையை பறித்துக் கொண்டதாகவும், வாழ வழியில்லாமல் தவிப்பதாகவும், தான் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரியும் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பீதரைச் சேர்ந்தவர் விக்னேஷ். அவரது மனைவி பெயர் பிரனீதா. திருமணமாகி 12 வருடங்களாகின்றன. விக்னேஷ் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
12 வருட வாழ்க்கையில் இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆரம்பத்தில் இது சாதாரணமாகத் தோன்ற பின்னர் இருவரும் சண்டைபிடித்துள்ளனர். இதனிடையே அவர்களின் கடையின் வருமானமும் போதவில்லை.
இதனால் கணவருடன் எப்போது பார்த்தாலும் சண்டை பிடித்தபடி இருப்பாறாம் பிரனீதா. இவர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டிய பெரியவர்களும் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து நின்று அவர்களும் சண்டை போட்டு வந்துள்ளனர்.
இந்த சண்டை நாளுக்கு நாள் முற்றவே விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினர் தம்பதியினர். அது இன்னும் முடியாமல் உள்ளதாம். இந்த நிலையில் மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் விக்னேஷ்.
அதில், எனக்கும், எனது மனைவிக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. இதைக் காரணமாக வைத்து எனது மனைவியும், அவரது உறவினர்களும் என்னைக் கொடுமைப்படுத்துகின்றனர். தொல்லை தருகின்றனர்.
எனது ஒரே வாழ்வாதாரம் தையல் கடைதான். அதையும் பறித்துக் கொண்டனர். இதனால் நான் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன். என்னால் வாழ முடியவில்லை. இவர்களிடம் சிக்கி தினந்தோறும் சாகிறேன்.
இவர்களிடம் சிக்கி தவிப்பதற்குப் பேசாமல் எனது உயிரை மாய்த்துக் கொள்வதே நல்லது என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன். சட்டப்படி தற்கொலை தவறு என்பதால் என்னால் அதை செய்ய முடியவும் இல்லை.
நான் கருணைக் கொலை செய்து கொள்ள எனக்கு ஆளுநர் அனுமதி தர வேண்டும். மாவட்ட நிர்வாகம் அனுமதி தர வேண்டும். அப்போதுதான் எனக்கு விமோச்சனம் கிடைக்கும். இல்லாவிட்டால் எனக்கு எனது மனைவி குடும்பத்தாரிடமிருந்து நியாயம் கிடைக்க வேண்டும் என்று அவர் உருக்கமாக கூறியுள்ளார்.






