பேஸ்புக் கண்காணிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியா..!

500

facebookபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் குறித்த தகவல்களை தரும்படி கோரும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

பேஸ்புக் நிறுவனம் தனது செயற்பாடுகள் தொடர்பான வெளிப்படைத்தன்மை அறிக்கையில் இதை தெரிவித்திருக்கிறது. பேஸ்புக் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் உலக அளவில் அதிகபட்சமாக பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களைக் கோரும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, கேனடா ஆகிய இருநாடுகளும் இணைந்து முதல் இடத்தில் இருக்கின்றன.

அடுத்த இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.2013 ஆம் ஆண்டின் முதல் ஆறுமாத காலத்தில் மட்டும் இந்தியா 3245 வேண்டுகோள்களை பேஸ்புக் நிறுவனத்திடம் வைத்திருக்கிறது. இதில் 4144 பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை இந்திய அரசு கோரியிருக்கிறது. இவற்றில் சுமார் 50 சதவீத கோரிகைகளுக்கு பேஸ்புக் நிறுவனம் பதில் அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகளின் இந்த முயற்சிகள் இணையசுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை பாதிக்கும் என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன. பேஸ்புக்கின் இந்த அறிக்கை வரவேற்கத்தக்க முன்முயற்சி என்றாலும், இந்த அறிக்கை முழுமையானதுமல்ல,போதுமானதுமல்ல என்கிறார் லண்டன் பல்கலைக்கழகத்தின் தகவல்தொடர்பு மற்றும் சமூகம் தொடர்பான ஆய்வு மாணவர் முரளி ஷண்முகவேலன்.

பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையில், இந்திய அரசு என்னவிதமான தகவல்களைக் கோரியது என்பது குறித்தும், பேஸ்புக் நிறுவனம் என்னவிதமான தகவல்களை பகிர்ந்து கொண்டது என்பது குறித்தும் தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை என்று கூறும் முரளி ஷண்முகவேலன், இந்தியா போன்ற ஜனநாயக நாடுகள், மற்ற நாடுகளைவிட தமது குடிமக்களை தமது நேரடி கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற நோக்கிலேயே இத்தகைய முன்னெடுப்புக்களை மேற்கொள்வதாக கருதுகிறார்.

இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை என்பது இன்னமும் பெருமளவில் தொழிலாளர் சார்ந்த துறையாக மட்டுமே தொடர்வதாலும், அறிவுசார் துறையாக அது இன்னமும் முழுமையாக பரிணமிக்காமலிருப்பதாலும் இந்திய அரசின் மையப்படுத்தப்பட்ட இணைய கண்காணிப்பு கட்டமைப்பு மற்றும் நடைமுறைகள் குறித்து, தகவல் தொழில்நுட்பத்துறையிலிருந்து உரிய அளவில் எதிர்ப்பு உருவாகவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், தனிமனித அந்தரங்கம் மதிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய சமூகங்களிடம் போதுமான புரிதலும் உரிய விழிப்புணர்வும் வளர்க்கப்படவில்லை என்று கூறும் முரளி ஷண்முகவேலன், இத்தகைய சூழலை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசுகள், இணைய கண்காணிப்பு தொடர்பிலான தமது கட்டுப்பாட்டை அதிகப்படுத்திக்கொள்ள பயன்படுத்திக்கொள்வதாகவும் தெரிவித்தார். அரசுகளின் இத்தகைய முயற்சிகளுக்கு, தகவல் தொழில்நுட்பத் துறைக்குள்ளிருந்தே மேலதிகமான விமர்சனங்கள் வரவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.