இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ அனுப்பிய, “சந்திரயான் – 1´ விண்கலம், நிலாவைப் பற்றிய பல அரிய தகவல்களை அனுப்பியுள்ளது. இதன் மூலம், நிலாவில், நீர் மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தகவலை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், “நாசா´ உறுதி செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், “இஸ்ரோ´, நிலாவைப் பற்றிய ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக, “சந்திரயான் – 1´ விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது. அது, நிலாவைப் பற்றிய பல அரிய தகவல்களை அனுப்பி வருகிறது. இதன் மூலம், நிலாவில் உள்ள பாறைகள், மலைகள் மற்றும் படிமங்கள் பற்றிய தகவல்களைப் பெற முடிகிறது.
இதனிடையே, சந்திரயான் -1, அனுப்பும் தகவல்களை, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா, தொடர்ந்து கவனித்து வருகிறது. இதற்கு முன், 2009ம் ஆண்டு, நிலாவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதாக, நாசா கூறியது. எனினும், நீர் படிமங்களாக இருப்பதாகவும், சூரியப் புயல் ஏற்பட்ட போது, நீர் மூலக்கூறுகள் உருவாகி, பின் படிமங்களாக மாறியதாகவும் கூறியது.
இந்நிலையில், புதிய ஆராய்ச்சியின் படி, சூரியப் புயலால், நீர் மூலக்கூறுகள் உருவாகியிருக்க வாய்ப்பு இல்லை என, ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். நிலாவின், சுற்று வட்டப்பாதை மற்றும் அதன் மேற்பரப்பில் மேற்கொண்ட ஆய்வில், நிலாவிலிருந்து சில துகள்கள் சேகரிக்கப்பட்டன. அந்த துகள்களை ஆய்விற்கு உட்படுத்தியதில், அதில், “ஹைட்ராக்சில்´ மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஒரு “ஆக்சிஜன்´ அணுவும், ஒரு “ஹைட்ரஜன்´ அணுவும் இணைந்ததே, “ஹைட்ராக்சில்´ எனப்படுகிறது. இதன் மூலம், நிலாவில் நீர் மூலக்கூறுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிலாவின் மேற்பரப்பை ஆழமாக ஆராய்ந்து, சந்திரயான் – 1, அனுப்பிய தகவல்களின் மூலம், ஒரு காலத்தில் நிலாவில் நீர் இருந்ததும், தற்போது, படிம நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. சந்திரயான் அனுப்பிய தகவல்களின் மூலம், நிலாவில் நீர் மூலக்கூறுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு நிலவும் தட்ப வெட்ப நிலைக்கான காரணங்கள், நிலா உருவான விதம், அதில் நிலவும் குறைந்த ஈர்ப்பு விசைக்கான காரணம், அதன் ஆயுள் காலம் போன்ற தகவல்களை அறியும் முயற்சியில், “நாசா´ஈடுபட்டுள்ளது.





