16 வகை செல்வம் தரும் வரலட்சுமி பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்!!

443

ammalumy

‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ வாழ்க்கை-இந்த வார்த்தைக்கு ஆழ்ந்த பொருள் உண்டு. இந்த வார்த்தையின் பொருள்.

மனிதனே, அது உனக்குத் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு இதனால் நன்கு பயன் பெறு.

வாழ்க்கை ஓர் அழகு
அதனை ரசித்து வாழ்
வாழ்க்கை ஒரு நல்ல கனவு
அதனை வாழ்ந்து நனவாக்கு
வாழ்க்கை ஒரு சவால்
துணிந்து அதனை எதிர் கொள்
வாழ்க்கை உன் கடமை
அதனை முறையாய் செய்து முடி
வாழ்க்கை ஒரு நீண்ட பாடம்
அன்போடு ஆர்வத்தோடு அதனைப்படி
வாழ்க்கை ஒரு விளையாட்டு
விளையாட்டினையும் ஒழுக்கம் தவறாது விளையாடு
வாழ்க்கை ஒரு துன்பமானதும் கூட
வாழ்ந்து அதனை வென்று விடு
வாழ்க்கை ஒரு பாட்டு
அதனை மகிழ்ச்சி பாட்டாக்குவதும்
சோகமான பாட்டாக்குவதும்
உன் கையில்
வாழ்க்கை ஒரு போராட்டம்தான்
வாழ்வு முடியும் வரை போராடு
வாழ்க்கை எதிர்பாரா அனுபவங்கள் கொண்டது
அதனை ஏற்றுக் கொள்
வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உண்டு
நீ அதனை உருவாக்கிக் கொள்.
வாழ்க்கை ஒரு பொக்கிஷம்.
அதனை காப்பாற்று. அழித்து விடாதே.
வாழ்க்கை உன் கையில் கிடைத்த காமிரா
நல்லவைகளை தேடி பிடித்துக் கொள்.

வாழ்க்கையின் சட்டங்கள்

* கடந்த காலத்தினைப் பற்றியே நினைத்து உருகாதே. இப்படி உருகாது இருந்தால் நிகழ் காலம் நன்கு இருக்கும்.

* பிறர் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதிலேயே வாழ்க்கையை கழிக்காதே.

* காலம் எல்லா மனப் புண்களையும் ஆற்றும். கொஞ்சம் அவகாசம் கொடு.
* உன்னை மற்றவரோடு ஒப்பிடாதே.

* மண்டையை குடைந்து யோசிக்காதே. உரிய நேரத்தில் உரிய பதில்கள் தானே வரும்.

* உன் மகிழ்ச்சிக்கு நீயே பொறுப்பு.

* சிரி, புன்னகை, நீ உலகின் மொத்த பிரச்சினைகளுக்குப் பொறுப்பாளி அல்ல.

இப்படி வாழ்வினை பற்றி அநேக கருத்துகள் பரவலாக உள்ளன.

எல்லாவற்றினையும் சொல்லலாம், எழுதலாம். ஆனால் நடைமுறைப்படுத்தி வாழ்வது எளிதான காரியமா என்ன? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அது நம் முன்னோர்களுக்கு நன்கு தெரிந்து உள்ளது.

அதனை நம் இரத்தத்தில் ஊற வைத்து மூளையில் பதிய வைத்து வாழையடி வாழையாய் சிறந்து வாழ சில வழிமுறைகளை புகுத்தி உள்ளனர்.

தேவையான அனைத்தும் பெற்றாலே ஒரு வாழ்க்கை பூரணத்துவம் பெறுகின்றது.

பணம் இருந்து நோயும் இருந்தால் என்ன செய்வது?

அதுபோல் நல்ல ஆரோக்கியம் இருந்து வறுமை இருந்தால் அது வேதனை தானே.

இப்படி பல உதாரணங்களைக் கூறிக் கொண்டே போகலாம். ஆகவே தான் நம் முன்னோர் வாழ்க்கை வெற்றியின் சூட்சுமத்தினை ஒருவரை வாழ்த்துவதன் மூலம் உணர்த்தினர்.

மேலும் எதனை நாம் அடிக்கடி சொல்கின்றோமோ, நினைக்கின்றோமோ நாம் அதுவாகவே மாறி விடுவோம்.

இது இயற்கை. ஆகவேதான் பெரியோர்கள் முதியவர்களை அந்தந்த கால கட்டங்களின் தேவைக்கேற்ப வாழ்த்தினர்.

சிறியவர்களை ‘சிரஞ்சீவியாக இரு’ என்பர். நீண்ட ஆயுளும், ஆரோக்கியம் பெற்று வாழ் என்பது இதன் பொருள். மேலும் ஒழுக்கமான வாழ்வு வாழும் அனைவரும் பெரியோரே.

அவர்களுக்கு ‘வாக்கு பலிதம்’ உண்டு. ஆக ஒவ்வொருவரின் வாழ்வும் மேன்மை பெற்று சிறந்தது.

திருமண சடங்கில் தம்பதிகளை வாழ்த்தும் பொழுது

‘ஆல் போல் தழைத்து
அருகு போல் வேரூன்றி
மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழ
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க’ என வாழ்த்தினர்.

ஆல் போல் தழைத்து என்றால் ஆலமரம் போல் உன் வாழ்வும் குடும்பமும் பரந்து விரிந்து உறுதியாய் காலம் முழுவதும் இருக்கட்டும் என்ற பொருள்படும்.

அருகு போல் வேரூன்றி என்றால் அருகம்புல்லின் வேர் பூமியின் அடியில் எவ்வளவு தூரம் நீண்டு செல்லும் என்பதனை எளிதில் அறிய முடியாது.

அவ்வேர், சூழ்நிலை கனியும் பொழுது மீண்டும் துளிர்த்தெழும் அழியாத் தன்மை கொண்டது.ஒவ்வொரு குடும்பமும் அதுபோல் உறுதியாக வேர் கொள்ள வேண்டும்.

மூங்கில் எப்பொழுதும் கூட்டம் கூட்டமாய் செழித்து இருக்கும். அது போல,ஒவ்வொரு மனிதனும் உற்றார்,உறவினர், சுற்றம் சூழ வாழ்வதே அழகு பெருமை.

ஆக எப்பேர் பட்ட அரிய கருத்துகளை சிறிய வார்த்தைகளில் நம் முன்னோர் நமக்கு புரிய வைத்து அதன் படி வாழவும் வாழ்த்தியுள்ளனர் என்பதனை பாருங்கள்.

மேலும் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க எனவும் வாழ்த்துகின்றனர். என்ன இந்த பதினாறு பேறுகள் இதனை காளமேக புலவர் கூறிள்ளார்.

துதி, வாணி, வீரம், விஷயம், சந்தானம், துணிவு, தனம், அதிதான்யம், சவுபாக்கியம், யோகம், அறிவு, அழகு. புதிதாம் பெருமை, அறம், குலம், நோயின்மை, பூண்வயது. பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே.

-காளமேகப்புலவர்.
துதி – புகழ்
வாணி – கல்வி
வீரம் – தைரியம்
விஜயம் – வெற்றி
சந்தானம் – வாரிசு
துணிவு – துணிவு
தனம் – பொருள்
அதிதான்யம் – உணவுப்பொருள்
சௌபாக்கியம் – வளம்
போகம் – மகிழ்ச்சி
அறிவு – புத்தி
அழகு – அழகு
புதிதாம்பெருமை – கவுரவம்
அறம் – தானம்
குலம் – ஒழுக்கமுடைய குடும்பம்
பூண்வயது – ஆரோக்யமான நீண்ட ஆயுள்

இவற்றினைத் தருவாய் இறைவனே என அவர் வேண்டுவது போல நமக்குத் தேவை யானவை வாழ்வில் எவை அதனை எவ்வாறு பெற வேண்டும் என உணர்த்துகின்றார்.

அபிராமி பட்டர் அன்னை அபிராமியிடம் கேட்கும் பதினாறு பேறும் இவ்வாறே அமைந்துள்ளது.

கலையாத கல்வியும், குறையாத வயதுமோர்
கபடுவாராத நட்பும்
குன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி யில்லாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்-தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியும் கோணாத கோலும்
துன்பமில்லாத வாழ்வு-ம்
துய்யநின் பாதத்தில் அன்பும் பெரிய
தொண்டரோடு கூட்டு கணடாய்
அலையாழி அறியதுயிலு மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகமான
அருள்வாமி அபிராமியே

என வேண்டி நம் அனைவருக்கும் வேண்டி பெற வேண்டியதனை, வாழும் முறையினை கற்பிக்கின்றார்.

ஒருவன் நன்கு வாழ அவனது முயற்சி மட்டும் போதாது. அவனது குடும்பம் சமுதாயம் அரசாங்கம் அனைத்தும் நன்கு இருந்தாலே தனி மனிதன்.வாழ்வு சிறக்கும் என்கிறார்.

கலையாத கல்வி – வெறும் கல்வி என்பதில்லாமல் வாழ்விற்கு பயன்படும்.
குறையாத வயதும் – முதுமை கூடா வாழ்வு
ஒரு கபடு வாராத நட்பு – ஏமாற்றும் நட்பும், கூடா நட்பும் வேண்டாம்.
குன்றாத வளமையும் – மறையாத செல்வம்
குன்றாத இளமையும் – உடல் ஆரோக்யம்
கரு பிணி இல்லாத உடல் – நோயில்லாத உடல்
சலியாத மனம் – சோர்வடையாத மனம்
அன்பு அகலாத மனைவி – கணவன் – மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் அன்போடு இருக்க வேண்டும்.
தவறாத சந்தானம் – நேர்வழி செல்லும் குழந்தைகள்
மாறாத வார்த்தை – சொன்ன சொல் மாறாது இருத்தல்
தடைகள் வாராத கொடை – தங்கு தடையின்றி தானம் செய்தல்
தொலையாத நிதி – திருடு, களவு போகாத செல்வம்
கோணாத கோல் – நேர்மையான செயல்கள்
ஒரு துன்பம் இல்லாத வாழ்வு – வேதனை இல்லாத வாழ்வு
தூய நின் பாதத்தில் அன்பு – உன் பாதத்தில் என்றும் அன்பு
தர வேண்டும் தாயே

என்ற இந்த வேண்டுதலை இன்று (வெள்ளிக்கிழமை) வரலட்சுமியை பூஜித்து வேண்டி பெறுவோமாக.