தாய்லாந்து இலங்கை கொடியுடன் ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட அனுமதி..!

266

shipஇந்து சமுத்திரத்தில் இலங்கை கொடியுடன் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கியது போன்று தாய்லாந்து அரசுக்கும் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரட்ன அழைப்பு விடுத்தார்.

பாரிய மீன்பிடி கப்பல்களை உபயோகித்து மீன் பிடிப்பதுடன் அவற்றை இலங்கை ஊடாகவே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை அரசுக்கும், தாய்லாந்து அரசுக்கும் இடையே 2004 ல் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட கடற்றொழில் கூட்டு செயற்குழுவின் இரண்டாவது கூட்டம் நேற்று ஆறு வருடங்களின் பின் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் ஆரம்பமானது.

ஆரம்ப வைபவத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாளை 31ம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் இரு நாடுகளுக்கிடையேயும் கடற்றொழில் துறை சார்ந்த விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.

இலங்கையில் எம்மிடம் ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபடுகின்ற பாரிய வள்ளங்கள் இல்லை. இதனால் மீன் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க முடியாதுள்ளது.

சுமார் 200 மெற்றிக் தொன் வரையில் களஞ்சியப்படுத்தக் கூடிய பாரிய மீன்பிடி கப்பல்கள் சீனாவில் உள்ளன. இதனால் சீனாவுக்கு இலங்கை தேசிய கொடியுடன் இந்து சமுத்திரத்தின் ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்கியுள்ளோம். அவர்கள் பிடிக்கும் மீனை இலங்கையின் மீன்பிடி துறைமுகங்கள் ஊடாக ஏற்றுமதி செய்ய வேண்டும்.

இதேபோன்று ஜப்பானின் ‘டூனா கிங்’ என்றழைக்கப்படும் கியோஷி கிமுராவிடமும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளேன்.

தாய்லாந்தும் தங்களது பாரிய மீன்பிடி படகுகளை, கப்பல்களை பயன்படுத்தி இலங்கை கொடியுடன் மீன் பிடிக்க முன்வர வேண்டும் என்பதுடன் தாய்லாந்தின் நவீன தொழில்நுட்பங்களையும் இலங்கைக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தாய்லாந்தின் கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் டொக்டர் விமொல் ஜன்ராரொட்டாய் அமைச்சின் செயலாளர் கலாநிதி டி. எம். ஆர். பி. திஸாநாயக்க உள்ளிட்ட தாய்லாந்து மற்றும் இலங்கை பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.