கந்துரட்ட மெரூன்ஸில் விளையாட சங்கக்கார தீர்மானம்..!

362

sangaசம்பியன்ஸ் லீக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கந்துரட மெரூன்ஸ் அணிக்காக விளையாடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார கூறுகிறார்.

இந்தியாவில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் லீக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் குமார் சங்கக்கார ஐதராபாத் சன்ரைசஸ் அணிக்காக விளையாடுவரா? அல்லது இலங்கையின் கந்துரட அணிக்காக விளையாடுவாரா? எனும் சந்தேகம் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வந்தது.

கந்துரட அணிக்காக விளையாடுவதற்காக ஐதராபாத் சன்ரைசஸ் அணியிலிருந்து தாம் விலகும் பட்சத்தில் அதன் அதிகாரிகளுக்கு செலுத்த வேண்டிய நட்ட ஈடு குறித்து பேச்சவார்த்தை நடத்த தலையீடு செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் பல தடவைகள் தாம் கோரியதாக குமார் சங்கக்கார கொழும்பு என்.சி.சி மைதானத்தில் நேற்று தெரிவித்திருந்தார்.

எனினும் இறுதித் தருணம் வரை அது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெளிவான தீர்மானமொன்றை அளிக்காததால் தாம் கடும் அசௌகரியத்துக்கு உள்ளானதாக குமார் சங்கக்கார வலியுறுத்தினார்.

இது நாட்டுக்கும் பணத்திற்கும் இடையில் அல்லது ஐ.பி.எல்லுக்கும் இடையில் உள்ள தெரிவு என்று பலரும் இதனை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அது முற்றிலும் தவறு. எனினும் கிரிக்கெட் நிர்வாகிகள் என்ற வகையில் சன்ரைசஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி நட்ட ஈடின்றியோ அல்லது நட்ட ஈட்டின் தொகையை குறைத்தோ என்னை விடுவிக்க முடிந்தால் கந்துரட அணிக்காக விளையாடுகிறேன். எந்தப் பிரச்சினையும் இல்லை என நான் கூறினேன்.

நட்ட ஈடு குறித்து குமார் சங்கக்கார விளக்கம்:

அதனை முழுமையாக நான்தான் ஏற்க வேண்டும். கிரிக்கெட் நிர்வாகக் குழு என்ற வகையில் அவர்கள் இந்தப் போட்டிகளில் இலங்கையின் பிராந்திய அணிகளுக்காக இலங்கை வீரர்கள் விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்பதை நான் அறிவேன்.

அதேபோன்று இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கும் இழப்பீடின்றி நான் ஐதராபாத் அணிக்காக விளையாடினால் அவர்களுக்கு கிடைக்கும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் டொலர்கள் அற்றுப்போகும் என்பதும் எனக்கு புரிகின்றது. அவ்வாறே அவர்கள் கிரிக்கெட் நிர்வாவாகக் குழு என்ற ரீதியில் சகல வீரர்களிடமும் ஐ.பி.எல் ஒப்பந்த பிரகாரம் 10 வீதம் அறிவிடுகின்றனர்.

சம்பியன்ஸ் லீக் போட்டிகளின் போது மேலும் 5 லட்சம் டொலர்கள் அவர்களுக்கு கிடைக்கும். இவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் இழப்பீடு கிரிக்கெட் நிர்வாகத்தை சாரும். தனிப்பட்ட ரீதியில் எவருக்கும் இழப்பு ஏற்படாது. எனினும் இதில் மட்டுமல்ல.

எதிர்காலத்திலும் இந்தப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியாததுதான் இதிலுள்ள பாரியதொரு இழப்பாகவுள்ளது. வீரர்களை தனிமைப்படுத்தாது எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் திட்டமிடப்படல் வேண்டும்.