பாகிஸ்தான் இந்தியாவோடு சமாதான பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளது. எனவே வாய்ப்பு கிடைத்தால் நடந்தே பாகிஸ்தான் செல்ல ஆசைப்படுகிறேன் என பிரபல நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான ரம்யா பரபரப்பை கிளப்பியுள்ளார்.
நடிகை மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ரம்யா சமீபத்தில் கன்னட டிவிக்கு அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் நாடுகளின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்தரங்கில் கலந்துக்கொண்ட பொழுது பாகிஸ்தானியர்கள் நன்றாகவே எங்களுடன் பழகினர். பாகிஸ்தானுக்கு செல்வது நரகம் செல்வதற்கு ஒப்பானது என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியது போல அந்நாடு இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரம்யாவின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கர்நாடக பாஜக மற்றும் விஷ்வ இந்து பரிஷத், ஏபிவிபி உள்ளிட்ட இந்து அமைப்புகள் நேற்று பெங்களூரு, மைசூரு, மண்டியா பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
மேலும், ரம்யா மீது தேசவிரோத வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரம்யா பெங்களூர் மிரர் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தேச துரோக வழக்கு தவறாக பயன்படுத்தப்படுகிறது. நான் ஒன்றும் தேசத்திற்கு எதிராகவோ அல்லது தனி நபருக்கு எதிராகவோ கருத்தை தெரிவிக்கவில்லை.
பாகிஸ்தான் இந்தியாவுடன் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் பல ஆயிரம் மைல்களை நான் நடந்தே கடந்து பாகிஸ்தான் செல்ல ஆசைபடுகிறேன். இரு நாடுகளும் அமைதியை விரும்பும் நிலையில் பாகிஸ்தான் செல்ல நான் ஏன் தயங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி பரபரப்பை கிளப்பியுள்ளார்.






