இறைவன் இருக்கிறாரா?

725

இறைவன் இருக்கிறாரா?
இது இன்று பலருடைய கேள்வி. இறைவன் இருக்கின்றாரா, இருந்தால் எனக்கு மட்டும் ஏன் துன்பம் மேல் துன்பம் வருகின்றது, இன்று நல்லோர் துன்பப்பட தீயோர் நன்றாக வாழ்கின்றனரே ஏன்? இப்படியாகக் கேள்விகள் பல. இதையெல்லாம் பார்க்கும் போது கடவுள் பக்தி மிகுந்தவர்கள் கூட சில வேளைகளில் தடுமாறி விடுகின்றனர். ஏன் இத்தனை கேள்விகள், தடுமாற்றங்கள்?

இறைவன் இருக்கின்றாரா…

ஆம், நிச்சயமாக இருக்கின்றார். இதனை ஸ்ரீ ராம கிருஷ்ண பரஹம்சர் ஒரு எளிய உதாரணத்தால் விளக்குகின்றார். இரவில் வானில் நாம் பல நட்சத்திரங்களைப் பார்க்கின்றோம். ஆனால் பகலில் அவை சூரியனது ஒளியால் நமக்குத் தெரிவதில்லை. ஆக பகலில் நாம் நட்சத்திரங்களைப் பார்க்காததால் நட்சத்திரங்களே இல்லை எனக் கூறிவிடமுடியுமா?. பகலிலும் அவை அதே வானில்தான் இருக்கின்றன, ஆனால் நம்மால்தான் பார்க்கமுடிவதில்லை. எனவே நாம் நட்சத்திரங்களே இல்லை எனக் கூறமுடியாது. அப்படிக் கூறினால் அது நமது அறியாமையே தவிர வேறெதுவும் இல்லை.

ஸ்ரீ ராம கிருஷ்ண பரஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற நாடறிந்த பக்திமான்கள் இறைவனைக் கண்டவர்கள். ஸ்ரீ ராம கிருஷ்ண பரஹம்சர் அன்னை ஜெகன்மாதாவையும், இறைதூதர் அல்லாவையும், இறைதூதர் இயேசுவையும் கண்டவர். விவேகானந்தர் கூட அன்னை ஜெகன்மாதாவைக் கண்டவர்தான். இவர்கள் கண்ட தெய்வங்கள் எல்லாம் வெறும் மாயையா?. உதாரணத்திற்காகத்தான் நாமெல்லோரும் அறிந்த இவ்விருவரையும் கூறினேன். இன்னும் எத்தனையோ சாதுக்களும், துறவிகளும் இறைவனை நேரில் கண்டுள்ளார்கள். அவர்கள் கண்டதும் வெறும் மாயையா?. இல்லை, அவர்கள் மிகுந்த சிரத்தையெடுத்து பல முயற்சிகள் செய்து இறைவனைக் கண்டார்கள்.

நாம் எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் எப்படி இறைவனைப் பார்க்க முடியும். மகான்கள் செய்த முயற்சி போல் எந்த முயற்சியும் செய்யாது இருந்து விட்டு, இறைவன் இல்லை என்று கூறுதல், நட்சத்திரம் இல்லை என்று கூறுவது போலத்தான்.

சாதுக்கள், துறவிகள் மட்டுமல்ல புகழ்பெற்ற விஞ்ஞானிகள் கூட இறைவன் இருக்கிறார் என்று கூறியுள்ளனர். அவர்கள் தங்கள் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட ஒரு மாபெரும் சக்தி உண்டெனக் கூறியுள்ளார்கள். அந்த மாபெரும் சக்திதான் நாம் வணங்கும் இறைவன். இறைவனால்தான் இந்தப் பிரபஞ்சமே ஒரு ஒழுங்கில் இயங்குகின்றது. இறைவனது சக்தி இல்லையேல் இந்த ஒழுங்கு இருக்குமா?.

எந்த ஒரு பொருளினதும் தொடக்கத்தினையும் ஆராய்ந்தால் அது அந்த இறைவனது சக்தியை நோக்கியே செல்லும். உதாரணமாக ஒரு மரத்தின் விதையினை எடுத்துக்கொள்வோம். ஏதாவது ஒரு தாய்மரத்தில் இருந்து அந்த விதை வந்திருக்கும். அந்த விதையினுள் ஒரு மரம் உருவாவதற்கான அனைத்து மூலக்கூறுகளுமே இருக்கும். சரியான சந்தர்ப்பம் உருவாகும்போது அந்த விதை முளை விட்டு, சிறு தாவரமாகிப் பின்னர் பெரிய மரமாக மாறுகின்றது. ஒரு விதையினுள் இத்தனை சூட்சுமங்களை வைத்தது யார்?. வைத்தவன் அந்த இறைவன். நம்மால் இப்படி ஒரு விதையினை உருவாக்கமுடியுமா?. முடியாது, ஏற்கனெவே இருக்கும் விதைகளைக் கலந்து ஒரு புது விதையினை வேண்டுமானால் உருவாக்கலாம். ஆனால் நாம் உருவாக்கும் புது விதையின் ஆதாரம், இறைவன் படைத்த அந்தப் பழைய விதைதான். இதைத்தான் நம் முன்னோர்கள் “அவனின்றி ஓர் அணுவும் அசையாது ” என்றார்கள்.

இங்கு நாம் கண்டுபிடிக்கும் பொருட்கள் அத்தனையுமே ஏற்கனவே இங்கு இருப்பவைதான். ஏற்கனவே இங்கு இருக்கும் மூலக்கூறுகளை விதம் விதமாகக் கலந்து புதிய பொருட்களை உருவாக்குகிறார்கள். நாமே முற்றுமுழுதாக ஒரு பொருளை உருவாக்கிவிடுவதில்லை. நம்மால் ஒரு மூலக்கூறினைக் கூட உருவாக்க முடியாதுள்ளபோது, இத்தனை மூலக்கூறுகளையும் படைத்தது யார்?. அதுதான் இறைவன்.

முடிவாக, இறைவன் அன்றும் இன்றும் என்றும் உள்ளவர். இறைவன் மேல் முழுநம்பிக்கையோடு அவனைக் காணமுயற்சி செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் அவனைக் காண்பீர்கள். இதை நான் கூறவில்லை. நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

இறைவன் இருந்தால் எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பங்கள். இக் கேள்வி பலர் மனதில் உண்டு.

முன் வினைப்பயனைப் பற்றி நிச்சயம் அறிந்திருப்பீர்கள். நாம் சென்ற பிறப்பில் செய்த வினைகளின் பலனை இந்தப் பிறப்பில் நிச்சயம் அனுபவித்தே தீரவேண்டும். முற் பிறப்பில் அதிக நல்ல காரியங்களையும், புண்ணியங்களையும் செய்தவன் இப் பிறப்பில் அதற்கான நல்ல பலனை அனுபவிக்கின்றான். முற் பிறப்பில் தீய காரியங்களிலும், பாவச் செயல்களிலும் ஈடுபட்டவன் இப் பிறப்பில் அதற்கான தண்டனையை அனுபவிக்கின்றான்.

அப்படியானால் நான் முற்பிறப்பில் அதிக பாவச் செயல்களில் ஈடுபட்டேனா?, அதனால்தான் இப் பிறப்பில் எனக்குத் துன்பமா எனக் கேட்கலாம். இப் பிறப்பில் நாம் அனுபவிக்கும் துன்பத்திற்கு முன் வினையின் 50 % தான் காரணம். மீதி 50% இப் பிறப்பில் நம் செயற்பாடுகளைப் பொறுத்து அமைகின்றது.

முற் பிறப்பில் நாம் எத்தனை தவறுகள் செய்தோம், எவ் வகையான தவறுகள் செய்தோம் என்பதெல்லாம் அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். சாமானியர்களான நமக்குத் தெரியாது. நாம் சென்ற பிறப்பில் ஒரு பொய் சொல்லி இருந்தால் கூட அதற்கான பலனை இப் பிறவியில் அனுபவித்தே தீரவேண்டும். பொய் சொன்னதற்கான பலனையே அனுபவித்தாகவேண்டும் என்கின்றபோது, மற்றைய தவறுகளுக்கு என்ன சொல்வது. வினை விதைத்தவன் வினையை அனுபவித்தே தீரவேண்டும். இது விதி. ஆனால் நாம் இந்த முன் வினைப்பயனின் தாக்கத்தைக் குறைக்கமுடியும். அதாவது சென்ற பிறப்பிற் செய்த வினைக்கு வருந்தி இறைவனை உள்ளன்போடு வணங்குவதன் மூலம் தாக்கத்தைக் குறைக்கலாம். ஆனால் இறைவனை வணங்குவதன் மூலம் முன்வினைப்பயனின் தண்டனைகளில் இருந்து தப்பிவிடமுடியாது, அவற்றின் தாக்கத்தை மட்டுமே குறைக்கமுடியும். யாராக இருந்தாலும் வினைப் பயனில் இருந்து தப்பமுடியாது. அபூர்வமாக சிலர் ஞானகுருக்கள், சாதுக்கள், சித்தர்கள் போன்றோரால் வினைப்பயனில் இருந்து தப்பியுள்ளனர்.

சரி, இப்பிறப்பில் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு முன்வினைப்பயனோடு, இப்பிறப்பில் நாம் செய்யும் செயல்களும் காரணமாகும். எப்படி என்றால் ஒரு குழந்தை மண்ணில் பிறக்கும் போது நல்ல குழந்தையாகவே உள்ளது. அது கள்ளம் கபடமற்றதாக இருக்கும். அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். ஆனால் வளர வளர அதன் இயல்புகள் மாறி விடுகின்றது. தவறுகளைச் செய்ய ஆரம்பிக்கின்றது. அது நன்றாக வளர்ந்த பின் அதனிடத்தில் நிச்சயம் ஒரு சில தீயபழக்கங்களாவது இருக்கும். இதற்கான காரணங்களாகப் பலவற்றைக் கூறமுடியும். சமூகம்தான் அவனை இப்படியாக்கிவிட்டது என்று கூடக் கூறலாம். ஆனால் ஊசி இடங்கொடுக்காமல் நூல் எப்படி நுழையமுடியும். தீயபழக்கங்களை ஒரு மனிதன் விலக்கமுடியும். அதற்காகத்தான் ஆறாவது அறிவாக பகுத்தறிவு அவனுக்குத் தரப்பட்டுள்ளது. ஆனால் அவன் சிந்திக்காது தீயபழக்கங்கள் தன்னிடத்தில் குடியேற அனுமதித்துவிடுகின்றான். ஆக அவன் சிந்தித்திருந்தால் தீயபழக்கங்களில் இருந்து தப்பி இருக்கமுடியும். குழந்தையாக அவன் இருந்த போது நல்லவனாகத்தானே இருந்தான். பின்னர் சிந்திக்கத் தவறியதால்தான் தனக்குத் தானே கேட்டினை வரவழைத்தான்.

இதற்குச் சில உதாரணங்களைக் கூறமுடியும். ஒருவன் படிக்கும் காலத்தில். படிக்க அனைத்து வசதியிருந்தும், தேவையற்ற வேலைகளில் ஈடுபட்டுவிட்டு, பிற்காலத்தில் சரியான வேலை இல்லாது துன்பப்படும் போது முற்பிறவி பயனை மட்டும் குறை கூறுவதில் பயனில்லை. ஒரு விவசாயி தன் தோட்டத்தில் சரியான நேரம் அறிந்து பயிரிடாமலும், பயிரிட்டால் தோட்டத்தைக் கவனிக்காதும் விட்டால் எப்படி விளைச்சல் கிடைக்கும். விளைச்சல் கிடைக்காது போனபின்னர் முற்பிறவிப்பயனைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை. சிலர் சிகரெட் பிடிப்பது உடலுக்குக் கேடு என்று தெரிந்தேதான் பிடிப்பார்கள், பின்னர் கான்சர் வந்தால் ” சே… முற்பிறப்பில் என்ன பாவம் செய்தோமோ, நமக்கு கான்சர் வந்திருச்சே ” என்று சொன்னால் எவ்வளவு முட்டாள்த்தனம்.

மொத்தத்தில், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நாம் எந்த முயற்சியும் செய்யாது இருந்துவிட்டுப் பின் முன்வினைப்பயனைக் குறை கூறுவது முட்டாள்த்தனம். இருப்பினும் சிலர் என்ன முயற்சி செய்தாலும் அது தோல்வியில்தான் முடிவடையும். அவர்களும் தொடர்ந்து முயற்சி செய்துபார்ப்பார்கள் ஆனால் முடிவு முன்போலத்தான் இருக்கும். இவர்கள் இறைவனை உள்ளன்போடு வழிபட்டு, முற்பிறப்பில் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்தால் வாழ்வு சிறக்கும்.

ஆக எனக்கு மட்டும் துன்பம் ஏன் என்று கேட்பது தவறானது. மனிதர்களில் 99% ஆனோருக்கு ஏதாவதொரு கவலை இருக்கிறது. நாம் முற்பிறப்பிலும் இப்பிறப்பிலும் செய்த காரியங்களே நம் இன்பத்தினையும் துன்பத்தினையும் முடிவு செய்கின்றது. எனவே துன்பம் வரும்போது துவண்டுவிடாமல் இறைவனை மனதார வணங்கி துன்பத்தை இன்பமாக்கிக் கொள்ளுங்கள். “கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டார்”. இது நம் முன்னோர் கூறியது.

முற்பிறவியிற் செய்த வினை எத்தனை தூரம் மனிதனை அலைக்கழிக்கிறது. இப்படி இருக்க இப்பிறப்பிலும் பாவ காரியங்களில் ஈடுபடவேண்டுமா?. மனிதன் வாழும் காலம் சொற்பமானது. அந்த சொற்ப வாழ்நாளில் நம்மால் முடிந்தவரை எல்லோருக்கும் நல்லது செய்யவேண்டும். நாம் இறந்த பின்னர் நம்மோடு வருவது காசு,பணம், தங்கம் அல்ல. நாம் செய்த பாவ,புண்ணியங்கள்தான்.

Bhagavad_Gita_Ch_18_-_66_W

கடவுளை காண்பது எப்படி?
காய்ந்த சருகாக தலைமுடி…. கண்களில் ஓர் தெய்வீக ஒளி. உடலில் குறைந்த ஆடையும் அவரை ஞான செல்வந்தராக காட்டியது.

வழக்கமாக தான் அமரும் ஆற்றங்கரை அரசமரத்தடியில் அமர்ந்து உதயமாகும் சூரியனை உற்று பார்த்துக் கொண்டிருந்தார் ஞானி.

“ஐயா குருவே …எனக்கு வழிகாட்டுங்கள் ….” என கூறியவாரே…திடீரென ஓர் கரம் அவரின் கால்களை பற்றியது..அவரின் கால்களில் தனது தலையை வைத்து ஒருவன் கதறிகொண்டிருந்தான்.

சலனமற்ற ஓர் பாறை போன்று ஞானி உட்கார்ந்திருந்தார். அவரின் கண்கள் சூரியனை விட்டு அகலவில்லை.

“உங்களிடம் எத்தனையோ முறை கேட்டுவிட்டேன். எனக்கு கடவுளை காண வேண்டும். எனக்கு காட்டுங்கள்…. எனக்கு காட்டுங்கள்….” அவனது குரலில் ஓர் கடவுளை பார்க்க வேண்டும் என்ற உறுதி தெரிந்தது.

இன்று மட்டும் நடப்பதல்ல இந்த காட்சி… பல நாட்களாக தினம் இவன் வருவதும்..ஞானி சலனமற்று அமந்திருப்பதும் வாடிக்கையாகி விட்டது…

ஆனால் இன்று ….மெல்ல ஞானி அவனை நோக்கி திரும்பினார்.. அவன் கைகளை பற்றி அவனுடன் ஆற்றை நோக்கி நடந்தார்.

இருவரும் ஆற்றில் இறங்கினார்கள். இவனும் தனக்கு மார்பு வரை ஆற்றில் இறக்கி ஞானி மந்திர உபதேசம் தருவார் என நினைத்தான்.

சற்றும் எதிர்பாராத விதமாக அவனின் கழுத்தை பிடித்து நீரில் அமிழ்த்தினார் ஞானி.

சுவாசம் திணறியது. திக்கு முக்காடினான்…

இறப்பின் எல்லையை உணர்ந்தான்..

சில நொடிகளுக்கு பிறகு அவனை விட்டார் ஞானி.

“யேஹ்….” எனும் சப்தத்துடன் ஆற்றிலிருந்து வெளிவந்து பெரும் மூச்சு எடுத்தான்.

தன்னை திடப்படுத்திக் கொண்டு ஆற்றின் கரையை நோக்கி ஓடினான்.

திரும்பி பார்த்தால் ஞானி மெல்ல சலனமில்லமல் நடந்து வந்துகொண்டிருந்தார்.

அவனுக்கு கோபம் தலைக்கேறியது.“உங்களுக்கு கடவுளை காணும் வழி தெரியாவிட்டால் தெரியாது என சொல்ல வேண்டியது தானே? என்னை கொலை செய்ய வேண்டுமா? உங்களை நம்பி வந்ததுக்கு இதுதான் பலனா?”

தீர்க்கமாக பார்த்த ஞானியின் உதடுகள் அசைய துவங்கியது…”தினமும் கடவுளை காட்டு… கடவுளை காட்டு என கேட்டதால் உபயோகம் இல்லை. தண்ணீரில் மூழ்கியதும் வேறு சிந்தை இல்லாமல் சுவாசத்தை எடுக்கவேண்டும் என்பது மட்டுமே பிரதானமாக இருந்ததல்லவா? அது போல கடவுளை காணவேண்டும் என்பதை மட்டும் சிந்தையில் வைத்து முயற்சி செய். கடவுளை காணலாம்.” என்றார்

இவனக்கு புது சுவாசம் கிடைத்தது.

——————————ஓம்—————————————–

கடவுளை காணவேண்டும் என பலர் கேட்டும் செவி சாய்க்காத பரமஹ்ம்சர் நரேனுக்கு செவிசாய்த்ததின் ரகசியம் தெரிந்ததா?

இந்த கருத்தை சிருங்கேரி மஹா சன்னிதானம் நவீன யுகத்திற்கு ஏற்றார்ப்போல் நகைச்சுவையுடன் கூறுகிறார். ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பொழுது வேறு சிந்தனை ஏற்படுமா? அதுபோல கடவுளை காண வேண்டும் எனும் ஒருமுக சிந்தனை நிச்சியம் அவரை வெளிப்பட வைக்கும் என்கிறார்.

நாமும் முயற்சி செய்வோமா?

கடவுள் படையலை சாப்பிடுவாரா?
பூபாளம் இசைக்கும் காலை நேரம்….

சத்குரு விஷ்வ தீர்த்தர் தனது நித்திய பூஜையில் ஈடுபட்டிருந்தார். மங்கள வாத்தியம் முழங்க தீபாரதனை செய்தார் மூத்த சிஷ்யன் ஜகதீஷ்.

இறைவனின் சன்னிதானத்திலிருந்து படையல் செய்த பொருட்களை சிஷ்யர்கள் அனைவருக்கும் வழங்கினார்கள். அனைவரும் பக்திச் சுவையாலும் , பிரசாத சுவையாலும் மகிழ்ந்து கலைந்தனர்.

சத்குரு தனது ஆசனத்திலிருந்து எழுந்து தனது அறை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவரின் கால்கள் நடந்தாலும் கண்கள் ஜகதீஷை பார்த்த வண்ணம் இருந்தது…

குருவின் தீர்க்கமான பார்வையை உணர்ந்த ஜகதீஷ் அவரின் பின்னால் நடக்க துவங்கினான்.

அறைக்குள் வந்ததும் ஜகதீஷை நோக்கி கேட்டார்… “ எனது பிரிய ஜகதீஷ் சில நாட்களாக உனது செயல்களில் ஓர் வித்தியாசம் இருந்ததை உணர்கிறேன். முன்பு நைவேதியம் செய்யும் பிரசாதத்தை அனைவருக்கும் வழங்குவதில் முனைப்பாக இருப்பாய் , ஆனால் இப்பொழுது ஒதுங்கி இருக்கிறாயே என்ன காரணம்?”

தனது நிலையை குரு இவ்வளவு உன்னிப்பாக கவனிப்பார் என எதிர்பார்க்காத ஜகதீஷ் தனது நிலையை கூற துவங்கினான்.. “ குருவே ஆசிரம வாழ்க்கை துவங்கிய பொழுது பக்தி பூர்வமாக இருந்தேன். நித்திய பூஜை, நைவேதியம் என அனைத்திலும் ஈடுபட்டேன். தற்சமயம் தெளிவு பெற்றேன். நாம் படைக்கும் நைவேதியதை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? இது போன்ற தர்க்கம் எனக்குள் தோன்றியதால் என்னால் பிரசாதம் வழங்குவதில் ஈடுபட முடியவில்லை குருவே…”

அவனை ஊடுருவி பார்த்த குரு, “ ஜகதீஷ் உனது விருப்பபடியே செய். நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.

இறைவணக்கத்துடன் வகுப்பு துவங்கியது.. சென்ற வகுப்பில் புதிய பாடம் இன்று போதிக்கபடுவதாக குரு சொன்னதால் அனைவரும் ஆர்வமாக இருந்தனர்..

கால்கள் இரண்டையும் இணைத்து யோக முத்திரையில் அமர்ந்திருந்த சத்குருவை பார்க்க தக்‌ஷிணாமூர்த்தியை தரிசனம் செய்வதை போல இருந்தது.

அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு விஷ்வ தீர்த்தர்.

அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர். சிறிது நேரத்திற்கு பிறகு ஜகதீஷை சைகையால் அழைத்தார் விஷ்வ தீர்த்தர்.

குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.

“எனதருமை ஜகதீஷ், மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.

“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.

“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”

கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..” பூர்ண மித பூர்ண மிதம் …” என கூறி முடித்தான் ஜகதீஷ்.

மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.. “நீ சரியாக மனதில் உள் நிறுத்தியாதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”

பதட்டம் அடைந்த ஜகதீஷ், புத்தகத்தை காண்பித்து கூறினான்.. “ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்…”

“ஜகதீஷ்.. இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?”.. என்றால் விஷ்வதீர்த்தர்.

மெல்ல தலையசைத்தான் ஜகதீஷ்..

சத்குரு தொடர்ந்தார்… “ இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே? நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”

குழப்பமடைந்தான் ஜகதீஷ்…

“எனது பிரிய ஜகதீஷ்.. உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உற்கொள்கிறான்.
நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா? அது போலதான் இறைவன் உற்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேதியத்தை உற்கொள்கிறோம். ”

வகுப்பில் இருக்கும் அனைவரும் இருவரின் சம்பாஷணை புரியாமல் இருக்க…ஜகதீஷின் முகத்தில் ஒளி தெரிந்தது.

தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவித்தியம் செய்து முழுமையடைந்தான் ஜகதீஷ்.

கடவுள் தண்டிப்பாரா?
இமயமலையில் யாத்திரையாக பிரம்மச்சாரிகளோடு சென்றிருந்தபோது, ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார், “கடவுள் தண்டிப்பாரா?” என்று.
“தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது” எனச் சொன்னோம்.
உடனே அவர் கேட்டார், “அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்குத் தண்டனைகளே கிடையாதா? அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?”
அவரக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சென்னோம்…
குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன், தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.
வானுயர, பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடவே எறும்பு போல, தான் இருப்பதைப் பார்த்து பிரம்மித்தான்.
கீழே இருக்கும் தன் நண்பனை அழைப்பதற்காக “வாடா” என்றான்.
சப்தமாய் மலையிலிருந்து “வாடா” என்று குரல் எதிரொலித்தது.
தன்னை, “யார் வாடா” என்று கூப்பிட்டது என்பதை தெரிந்து கொள்ள, “யாரது?” என்றான்.
“யாரது?” என்று மலையும் திரும்பக் கேட்டது.
சிறுவன் கொஞ்சம் பயத்தோடு, “நீங்க யாரு?” என்றான். உடனே மலையும் அதேக் கேள்வியைத் திரும்பக் கேட்க, பயந்து, ஓடிப் போய் குருவைப் பார்த்து நடந்ததைச் சொன்னான்.
குரு சிரித்தபடியே சொன்னார்…
“இதுதான் இயற்கை, இதுதான் வாழ்க்கை.
நீ என்ன செய்கிறாயோ அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்,” என்று மலை எதிரொலிப்பு தத்துவத்தை, வாழ்வு தத்துவத்தோடு புரிய வைத்தார்.
அதேப்போலத்தான், கெடுதல் கூட செய்ய வேண்டாம்.
வாழ்வை எதிர்த்தாலே போதும்,
வாழ்வு அவரை எதிர்க்கும்.
வாழ்வை வரவேற்றால்,
அவரை….
வாழ்வு வரவேற்கும்.
எனவே இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள்.
வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும். வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பதில்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கின்றீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை, நாம்தான் நம்மையே தண்டித்துக் கொள்கிறோம்.
பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகுமுறையைத் தான் வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள்.
இனிமையாய் அணுகுங்கள்.
இனிமையாய் எல்லாம் அமையும்.
இது வாக்கல்ல,
என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.
வாழ்வை இனிமையாய் அணுகுவதும், நம்மை அதற்கென தயார் செய்வதும் ஜீவன் முக்த வாழ்வை வெளிப்படுத்த வைக்கும்.
நன்றி : ஜீவன் முக்தி