ஒரே குற்றச்சாட்டில் நளினி மீது இரண்டு வழக்கு!!

292

nalini

சிறையில் செல்போன் பயன்படுத்திய விவகாரம் தொடர்பான வழக்கை ரத்து செய்யக்கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக நளினி வேலூர் சிறையில் உள்ளார்.

அவர் சார்பாக வக்கீல் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நளினி ஆயுள் கைதியாக உள்ளார். அவர் ஆயுள் தண்டனையை ஏற்கனவே அனுபவித்து விட்டார். வேலூர் சிறை சிறப்பு முகாமில் தற்போது உள்ளார். வேலூர் சிறை சுப்பிரண்ட் ராஜலட்சுமி சிறையில் சோதனை நடத்திய போது நளினியிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

சிறையில் செல்போன் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறி அவர் செல்போன் வைத்துள்ளார் என்று பொலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை வேலூர் மாஜிஸ்திரேட் விசாரிக்க தொடங்கியுள்ளார். ஆகஸ்ட் 30ம் திகதி நளினி நேரில் ஆஜராக மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பியுள்ளார்.

நளினி மீது ஏற்கனவே இதுபோல ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் நளினி சிறையில் செல்போன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனால் நளினி உயர் வகுப்பு சிறையில் இருந்து சாதாரண சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனவே அதே குற்றச்சாட்டுக்காக மீண்டும் நளினி மீது வழக்கு பதிவு செய்தது சட்டவிரோதமானது. அதை ரத்து செய்ய வேண்டும். என்று கூறப்படடுள்ளது. இந்த மனு நீதிபதி சுப்பையா முன் இன்று விசாரணைக்கு வருகிறது.