கொழும்பில் இன்று மெழுகுவர்த்திப் போராட்டம்!!

278

Ahmadabad, India: Indian jewelry industry workers hold candles

சர்வதேச காணாமற்போனோர் தினமான இன்று வெள்ளிக்கிழமை இரவு காணாமற் போனோரின் உறவுகள் ஒன்றிணைந்து மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

காணாமற்போனோர் தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இந்த மெழுகுவர்த்திப் போராட்டம் இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

காணாமற்போனோரின் உறவுகளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று விசேடமாகச் சந்தித்துப் பேசிய பின்னர், அவர் கொழும்பில் தங்கியிருக்கும் நேரத்தில் இன்று இந்தப் போராட்டம் நடை பெறவுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பில் ஐ.நா வினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச காணாமற்போனோர் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதனை முன்னிட்டு காணாமற்போனோரை தேடிக் கண்டறியும் குழு, பிரஜைகள் குழு காணாமற்போன உறவுகளின் குடும்பங்களின் சங்கங்கள் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து கொழும்பில் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருடனான சந்திப்பு முடிவடைந்த பின்னர் இரவு 7 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஒன்று கூடும் காணாமற்போனோரின் ஆயிரக்கணக்கான உறவுகள் அமைதியாக மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டத்தை நடத்தவுள்ளனர்.

இதேவேளை, கடந்த சில மாங்களுக்கு முன்னர் காணாமற்போனோரின் உறவுகள் கொழும்பில் கவனவீர்ப்புப் போராட்டம் நடத்த முற்பட்ட வேளை அதில் பங்கெடுப்பதற்காக வடக்கிலிருந்து புறப்பட்ட மக்கள் வவுனியாவில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.