மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் ரெயில் நிலையத்தில் தினமும் நிறைய திருட்டு சம்பவங்கள் நடப்பதாக பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து குவாலியர் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியை ரெயில்வே பொலிசார் தீவிரப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் குவாலியர் ரெயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் பணத்தை திருடன் பிக்பாக்கெட் அடித்தான். அவனை ரெயில்வே பொலிஸ்காரர் கையும் களவுமாக பிடித்தார்.
ஆத்திரம் தீரும் வகையில் அந்த திருடனை ரயில்வே பொலிஸ்காரர் அடித்து உதைத்தார். அடி தாங்க முடியாமல் அந்த திருடன் மயங்கி விழுந்தான்.
அதன் பிறகும் அந்த ரெயில்வே பொலிஸ்காரர் கோபம் தீரவில்லை. அவனது சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்து சென்றார்.
தரையில் உடல் உரசி ரத்தம் வழிந்தோட அந்த திருடனை அவர் இழுத்துச் சென்றார். இந்த காட்சியை பயணி ஒருவர் செல்போனில் படம் பிடித்து வெளியிட்டார்.
ரயில்வே பொலிஸ்காரர் அந்த திருடனை தரதர வென்று இழுத்து செல்வதை ரெயில் நிலையத்தில் திரண்டிருந்த பயணிகள் யாரும் தடுக்கவில்லை. மாறாக எல்லோரும் வேடிக்கை பார்த்தபடி சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. வீடியோ காட்சியாகவும் பலரால் பகிரப்பட்டது.
இதையடுத்து அந்த ரயில்வே பொலிஸ்காரரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. உடனடியாக ரெயில்வே பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். திருடனை தரையில் போட்டு இழுத்துச் சென்ற பொலிஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.






