
சர்வதேச வங்கிகளின் போலி கடன் அட்டை தயாரித்து, பிரபல கடைகளில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த, இலங்கையர் ஒருவர் உட்பட இருவர் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி கடன் அட்டை தயாரிப்பு தொடர்பாக, மாருதிஹள்ளியில் பரிமளா கோல்டன் கேட் அபார்ட்மென்ட் மகேந்திர கருணராஜ்(50), மதுரை விவேகானந்தா வீதி அஸ்வின் குமார்(30), ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்கள் போலி கடன் அட்டை மூலம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் அபகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து பல்வேறு வங்கிகளின் 50 க்கும் மேற்பட்ட கடன் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
கைதானவர்களில், கருணராஜ், இலங்கையை சேர்ந்தவர். அஸ்வின் குமார் மதுரையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சென்னை வந்த இவர்களிடையே நட்பு ஏற்பட்டு உள்ளது. பிரான்சில் வசிக்கும் தன் சிறு வயது நண்பர் மூலம் இந்திய வங்கிகளின் கடன் அட்டை தகவல்களை, இ-மெயிலில் பெற்ற, கருணராஜ், அஸ்வின் குமாருடன் சேர்ந்து போலி கடன் அட்டைகளை தயாரித்து உள்ளார்.
இதற்கு தேவையான இயந்திரங்களை கேரளாவை சேர்ந்த நண்பர் ஒருவர் மூலம் மலேசியாவிலிருந்து வரவழைத்து உள்ளனர். தயாரித்த கடன் அட்டை மூலம் பெரிய ஷாப்பிங் மால், கடைகளில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி, பல்வேறு இடங்களில் அதை விற்று பணம் பெற்றுள்ளனர்.
இந்த பணத்தின் மூலம் சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ளனர். இந்த கார்ட்களை பல இடங்களில் பயன்படுத்தி உள்ளனர். போலி கடன் அட்டை தயாரிக்க உதவியாக இருந்த பிரான்ஸ் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நண்பர்களுக்கும், அவ்வப்போது பண உதவி செய்துள்ளனர்.
கிரெடிட் கார்டின், பின் எண்களை கேட்கும் நிறுவனங்களின் பொருட்களை மட்டும் இவர்கள் வாங்குவதில்லை. அத்துடன் ஒரு எண்ணில் தயாரித்த கடன் அட்டையை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி உள்ளனர். அதனால் எளிதாக அனைவரையும் மோசடி செய்துள்ளனர்.
கருணராஜ் சென்னையில் போலி கடன் அட்டை ஒன்றை பயன்படுத்தியபோது, கண்காணிப்பு கேமராவில் அவரின் படம் பதிவாகியிருந்தது. அதன்மூலமே இருவரும் கைது செய்யப்பட்டனர்.





