
நாகை மாவட்ட கடலோர பகுதியில் மர்ம நபர்கள் ஊடுருவியதாக வெளியான தகவலையடுத்து கடல் பகுதியில், கடலோர பாதுகாப்பு பொலிசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இலங்கை வழியாக, தமிழகத்திற்குள் ஊடுருவி கடலோர மாவட்டங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன் மத்திய உளவுத் துறை எச்சரித்தது.
இதையடுத்து தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கண் காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. நாகை மாவட்டம், திருக்கடையூர் கடல் பகுதியில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் தென்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
கடலோர பாதுகாப்பு பொலிசார் மத்திய புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையில் அத்தகவல் விஷமிகள் பரப்பிய வதந்தி என தெரியவந்தது.
இருப்பினும் கடலோரக் காவல் குழும பொலிசார் நாகை மாவட்ட கடல் எல்லையான கொடியம்பாளையத்தில் இருந்து கோடியக்கரை வரையிலான கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் மீன் பிடித்து துறைமுகத்திற்கு வரும் படகுகள், தீவிர சோதனைக்குப் பின் அனுமதிக்கப்படுகின்றன.





