
இந்திய மேற்கு வங்கத்தில் கல்லூரி விழா ஒன்றுக்கு தலைமையேற்க வந்த மாநில அமைச்சரை ஊர் மக்கள் சுற்றி வளைத்து உதைத்துள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புரத் அருகே உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மாநில மந்திரி நூர் ஆலம் சவுத்ரி வந்திருந்தார்.
அப்போது அங்கே கூடிய பொதுமக்கள் அமைச்சரை பிடித்து அடித்து உதைத்து கல்லூரி அறை ஒன்றில் சிறை வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் படுகாயமடைந்த அமைச்சரை மீட்க விரைந்தனர்.
ஆனால் பொலிசாரை உள்ளே நுழைய விடாமல் தடுக்க கல்லூரி வாசலையும் அந்த ஊருக்கு செல்லும் சாலைகளையும் பொதுமக்கள் அடைத்துள்ளனர். மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்க பொலிசார் அனுப்பி வைத்த மருத்துவ வேனையும் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்பு பொதுமக்களுடன் பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தி மந்திரியை மீட்டுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் ஒரு மசூதி கட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்த தாக்குதல் நடந்ததாக தெரியவந்துள்ளது.





