தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் டி ஷர்ட், ஜீன்ஸ் அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை அணிந்து கல்லூரிக்கு வருகின்றனர்.
சில மாணவர்கள் டி ஷர்ட், டிராக் ஷூட் போன்றவற்றோடும் கல்லூரிக்கு வருகின்றனர். இதனால் கல்லூரிகளின் கண்ணியத்துக்கு குறைவு ஏற்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கு உடை கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது.
கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது. மாறாக முழுக்கை சட்டை மற்றும் நீளக்காற்சட்டை அணிந்து கம்பீரமாக வர வேண்டும்.
மாணவிகள் ஜீன்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஷர்ட்டுகள் அணிந்து வரக்கூடாது. ஆபாச உடையணிதல் கூடாது. மாணவிகள் சல்வார் கமீஸ் அல்லது சேலை அணிந்துதான் கல்லூரிக்கு வர வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் 3 லட்சம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
சிலர் அணியும் உடையால் ஏற்படும் தாக்கத்தை தவிர்க்க பொதுவான டிரஸ் கோட் ஏற்படுத்தப்படுகிறது. கல்லூரிகளுக்கு வரும் மாணவ மாணவிகள் அணியும் உடை குறித்த சுற்றறிக்கை அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.