கம்போடியாவில் மூங்கில் ரயில் சேவை : குறைந்த விலையில் வித்தியாசமான அனுபவம்!!

356

31

உலகிலேயே மிக வித்தியாசமான ரயில் சேவை கம்போடியாவில் இயங்கி வருகிறது. மீட்டர்கேஜ் பாதையில் செல்லக்கூடிய மூங்கில் மரங்களால் கட்டப்பட்ட அதிசய ரயில் சேவை இது.

பட்டம்பாங் பகுதியில் இருந்து போய்பெட் பகுதி வரை தினமும் இவ்வகை ரயில்கள் சென்று வருகின்றன.

பிரெஞ்சு காலனிய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த ரயில் பாதை, ஒருகட்டத்தில் பயன்படுத்தாமல் கைவிடப்பட்டது. அந்தப் பாதையில்தான் மூங்கில் ரயில்கள் சென்று வருகின்றன.

மூங்கில்களை வரிசையாக வைத்து மிதவை போலக் கட்டுகிறார்கள். இரு பக்கங்களிலும் இரும்புச் சக்கரங்களை இணைக்கின்றனர்.

முன் பகுதியில் சிறிய மோட்டார் ஒன்றை வைத்துவிட்டால் ரயில் தயார். மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் இந்த ரயில் பயணிக்கிறது.

எதிரில் இன்னொரு மூங்கில் ரயில் வந்தால், எந்த ரயிலில் குறைவான ஆட்களும் பொருட்களும் இருக்கின்றனவோ, அந்த ரயிலைத் தூக்கி, நிலத்தில் இறக்கி வைத்து விடுகிறார்கள்.

எதிரில் வந்த ரயில் கடந்த பிறகு, மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றி, இந்த ரயில் பயணத்தைத் தொடர்கிறார்கள். ரயில் கட்டணம் குறைவாக இருக்கும். எங்கே வேண்டுமானாலும் நிறுத்தி இறங்கிக்கொள்ளலாம், ஏறிக்கொள்ளலாம்.

இரு சக்கர வாகனம், விறகுகள், நெல் மூட்டைகள், கால்நடைகள் என்று ஏகப்பட்ட சரக்குகளையும் இந்த மூங்கில் ரயில்கள் சுமந்து செல்கின்றன.

மூங்கில் பெட்டிகள் அடிக்கடி உடைந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. ஆனால் உடனே சரி செய்துவிடுவார்கள்.

கம்போடியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, மூங்கில் ரயில் மிகவும் பிரபலமடைந்தது. புதிய ரயில் பாதைகள் போடப்பட்டதைத் தொடர்ந்து, பெரிய அளவில் இயங்கி வந்த மூங்கில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இன்று பட்டாம்பாங் பகுதிகளைச் சுற்றி மட்டுமே இயங்கி வருகின்றன. மெதுவாகச் செல்வதாலும் வசதியாக இல்லாததாலும் எல்லோரும் பயன்படுத்துவதில்லை.

ஆனால், சுற்றுலாப் பயணிகள் மூங்கில் ரயிலில் பயணம் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள்.

32 33 34 35 36 37