மீண்டுமொரு முறை ஆயுத கலாசாரம் ஏற்படுமாயின் அதற்கு அரசாங்கமே காரணம் – சுரேஷ்..!

504

sureshஇலங்கையில் மீண்டுமொரு முறை ஆயுத கலாசாரம் ஏற்படுமாயின் அதற்கு காரணமாக இலங்கை அரசாங்கமும் விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்களே காரணமாக இருப்பார்களே தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு ஒரு போதும் காரணமாக இருக்காது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாம் கோருவது ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமக்கு முழுமையான அதிகார பகிர்வு வேணும் என்றே.

ஆனால் எமது தேர்தல் பிரச்சாரங்களை அரச ஊடகங்கள் மிகைப்படுத்தி, நாம் மீண்டும் ஆயுத போராட்டத்தை தோற்றுவிக்க முயல்வதாக பிரச்சாரம் செய்கின்றது.

இலங்கையில் மீண்டுமொரு முறை ஆயுத கலாசாரம் ஏற்படுமாயின் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்களே காரணமாக இருப்பார்களே தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஒரு போதும் காரணமாக இருக்காது.

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்கில் மீண்டும் ஒரு ஆயுத கலாசாரத்தை கொண்டு வந்தது ஆளும் கட்சியே. அவர்களின் வேட்பாளரின் தந்தையாலையே அண்மையில் சாவகச்சேரியில் துப்பாக்கி சூடு நடாத்தப்படதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அதேவேளை வடக்கின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவுள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

வடக்கு மாகாண விளையாட்டு துறைக்கு கல்வி அமைச்சின் ஊடாக விளையாட்டு பொருட்கள் கையளிக்க 10 மில்லியன் ரூபாயும் சுழற்சி முறை கடன் திட்டத்திற்கு என ஒதுக்கப்பட்டிருந்த 26 மில்லியன் ரூபாய் என்பனவும் தேர்தலுக்காக பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

வெலிவேரிய போராட்டம் போன்ற போராட்டங்களை அடக்க பிரத்தியோகமாக பயிற்றிவிக்கப்பட்ட இராணுவம் உள்ளது அவர்கள் மூலம் தேர்தல் காலங்களில் மக்களை அச்சுறுத்தி மிரட்டி வாக்களிப்பை குறைக்கும் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என மேலும் அவர் தெரிவித்தார்.