
தமிழ்நாடு பவானிசாகரில் பெய்த பலத்த கடும் மழையினால் மரம் முறிந்து விழுந்து இலங்கை அகதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் ஆலங்கட்டி மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பலத்த மழை பெய்ததால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதையடுத்து பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் சுப்பிரமணி (43) இவரும் இதே முகாமை சேர்ந்த மாரிமுத்து (60) ஆகிய இருவரும் வர்ணம் பூசுபவர்களாக உள்ளனர்.
பணியை முடித்துவிட்டு ஒன்பது மணியளவில் பவானிசாகர் அருகே உள்ள முடுக்கன்துறையில் இருந்து இலங்கை அகதிகள் முகாம் நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தனர்.
அப்போது தென்னை வித்து ஆராய்ச்சி நிலையம் அருகே வரும்போது வீதியில் இருந்த வாகை மரம் ஒன்று திடீரென நடந்து சென்ற சுப்பரமணி மற்றும் மாரிமுத்து மீது விழுந்தது.
இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே இறந்தார். மாரிமுத்து கால் முறிந்து கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பவானிசாகர் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.





