கண்டுபிடிக்கப்படாத லட்சக்கணக்கான வைரஸ்கள் விலங்குகளிடையே!!

1308

virus1

விலங்கினங்களிடையே நாம் இதுவரை கண்டறியாத லட்சக்கணக்கான கிருமி வகைகள் காணப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது.

மனிதர்களைப் பாதிக்கவல்ல பெரும்பாலான நோய்க் கிருமிகள் விலங்குகளிடத்தில் இருந்து வந்தவைதான் எனும் நிலையில் பல்வேறு நோய்க் கிருமிகளை சுமக்கக்கூடிய ஒரு விலங்காக நாம் அறிந்துள்ள வௌவால் இனமொன்றை அமெரிக்க மற்று வங்கதேச விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

நாம் இதுவரை அறிந்திராத புதிய அறுபது வகையான கிருமிகள் அந்த வௌவால் இனத்தில் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

நோய்க் கிருமிகளை சுமக்கவல்ல மற்ற விலங்கினங்களிலும் இப்படி புதிய வகை நோய்க்கிருமிகள் இருப்பதாகக் கணக்கிட்டால் நாம் இதுவரை அறிந்திராத மூன்று லட்சத்து இருபதாயிரம் வகை நோய்க் கிருமிகள் விலங்கினங்களிடையே இருப்பதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்த நோய்க் கிருமிகளை நாம் அடையாளம் காணுவதென்பது எதிர்காலத்தில் தொற்று நோய்கள் மனிதரிகளிடையே பரவுவதைத் தடுக்க உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இத்தனைக் கிருமிகளையும் கண்டறிய அறுநூறு கோடி டாலர்கள் செலவாகும் என ஆராய்ச்சிக் குழு தெரிவிக்கிறது. ஆனால் ஒரு தொற்றுநோய் மனிதர்களிடையே பெரிய அளவில் பரவிட்டாலே அதனைக் கட்டுப்படுத்த இதனைவிட பல மடங்கு அதிகமான தொகை செலவாகும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த ஆய்வின் முடிவுகள் எம்பயோ என்ற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரெடிக்ட் என்ற அமெரிக்க ஆய்வுத் திட்டம் ஒன்று, உலகில் மனிதர்களும் விலங்குகளும் நெருங்கி வாழும் இடங்களில் இருந்து 240 புதிய வகை கிருமிகளை இதுவரை கண்டுபிடித்து அடையாளப்படுத்தியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.