அகதிகளை திருப்பி அனுப்புவதை இடை நிறுத்தியது சுவிஸ்!!

332

swiss

இலங்கையில் இருந்து வந்து அகதித் தஞ்சம் கோரியுள்ளவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை சுவிட்சர்லாந்து இடை நிறுத்தி வைத்துள்ளது.

அப்படி அனுப்பப்பட்ட இருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை அந்நாட்டின் குடிவரவுக்கான மத்திய அமைச்சின் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த பெயர் வெளியிட விரும்பாத இலங்கையிலிருந்து சுவிஸ் வந்து தஞ்சம் கோரியுள்ள ஒருவர் இந்த முடிவானது ஜெனிவாவில் மட்டும் ஐம்பதுக்கும் அதிகமானோருக்கு பலன் அளிக்கும் என்றார்.

சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கை திரும்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளது மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கவலை வெளியிட்டுள்ளது.

திருப்பி அனுப்பப்பட்ட இருவரில் ஒருவர் குறித்த விபரங்கள் வெளிப்படையாகத் தெரியவில்லை என்று பெர்ண் நகரிலிருந்து அம்னெஸ்டியின் பேச்சாளர் பட்ரிக் வோல்டர் தெரிவித்தார்.

அவர் திரும்பிச் சென்றபோது கைது செய்யப்பட்டார் என்பதை மட்டும் தம்மால் உறுதியாகச் சொல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இரண்டாவது நபர் சம்பந்தப்பட்ட விடயம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்துள்ளது என்றும் அந்தக் குடும்பத்திலுள்ள சுவிஸ்ஸில் பிறந்த இரண்டு சிறுவர்கள் உட்பட அனைவரும் கொழும்பு திரும்பிச் சென்றபோது அந்தப் பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணைகள் நடந்து வருகின்றன எனவும் அவர் மேலும் பிபிசியிடம் கூறினார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக முதலாவது நபர் எப்போது இலங்கைக்கு அனுப்பப்பட்டார் என்பது போன்ற விபரங்களை இப்போது வெளியிட முடியாது எனவும் அம்னெஸ்டியின் பேச்சாளர் கூறுகிறார்.