20,00,000 தாண்டியது சிரிய அகதிகளின் தொகை!!

348

hi-syria-refugees-cp-rtr3en

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுக் கலவரம் மற்றும் போர் அபாயத்தால் அங்கிருந்து வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டி விட்டதாக ஐ.நா. அகதிகள் ஏஜன்சி தகவல் தெரிவித்துள்ளது.

சிரியாவில் ராணுவத்துக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருவதால் சிரியாவில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் எந்நேரமும் சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இதனாலும் அங்கிருந்து வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இது குறித்து ஐ.நா அகதிகள் ஏஜன்சி ஆணையர் ஆன்டோனியோ குட்டர்ஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

ஓராண்டுக்கு முன்பு வரை சிரியாவில் இருந்து 2 லட்சத்து 31 ஆயிரம் பேர் வெளியேறி அண்டை நாடுகளான லெபனான், ஜோர்டன், துருக்கி, ஈராக் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் கடந்த 12 மாதங்களில் மட்டும், 18 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர்.

தற்போது ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேர் வெளியேறுகின்றனர். இவர்களுக்கு அண்டை நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலாம் அளிப்பதுதான் ஒரே ஆறுதலான விஷயம்.

கடந்த ஆகஸ்ட் நிலவரப்படி லெபனானில் 7 லட்சத்து 16 ஆயிரம் பேரும், ஜோர்டனில் 5 லட்சத்து 15 ஆயிரம் பேரும், துருக்கியில் 4 லட்சத்து 60 ஆயிரம் பேரும், ஈராக்கில்1 லட்சத்து 68 ஆயிரம் பேரும், எகிப்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேரும் குடியேறியுள்ளனர்.

இது தவிர 42 லட்சம் பேர் சிரியா நாட்டுக்குள்ளேயே வேறு பகுதியில் குடியேறியுள்ளனர். இவ்வாறு ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவை விட்டு அகதிகள் வெளியேறும் நிலை தொடர்ந்தால் அண்டை நாடுகளில் சிக்கல் ஏற்படும் என ஐ.நா சிறப்பு தூதர் நடிகை ஏஞ்சலினா ஜோலி தெரிவித்துள்ளார். இதனால் சர்வதேச உதவியை பெறுவது குறித்து அண்டை நாடுகளின் அமைச்சர்கள் ஐ.நா அதிகாரிகளை சந்தித்து பேச திட்டுமிட்டுள்ளன