தங்கப் புதையல் இருப்பதாக ஆசைகாட்டி மனைவியையே விருந்தாக்கி நிர்வாண பூஜை செய்து 8 பேரை நரபலி கொடுத்ததாக சப்பாணி என்ற நபரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சியில் கார் சாரதியான தங்கதுரை அண்மையில் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கொடுத்த முறைப்பாட்டின் பேரில் திருவெறும்பூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவரது நண்பர் சப்பாணி (35) நகைக்காக தங்கதுரையை கொன்று புதைத்தமை தெரியவந்தது.
தொடர்ந்து சப்பாணியிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார் சப்பானி.
இதன்போது தன்னுடைய தந்தை உட்பட 8 பேரை கொலை செய்து வாய்க்கால் பகுதிகளில் புதைத்து வைத்திருப்பதாகவும் சப்பாணி ஒப்புக் கொண்டார். இந்த கொலைகளுக்கு அடிப்படை காரணமே தங்கப் புதையல்தானாம்.
சப்பாணி 2010ஆம் ஆண்டிலிருந்து இந்த கொலைகளை செய்துள்ளார். வசதியானவர்களை குறி வைத்து தங்கப் புதையல் இருப்பதாக நம்ப வைத்ததுடன், அப்படி பணத்துடன் தங்கப் புதையலை தேடி தம்முடன் வருபவர்களுக்கு மனைவியையே முதலில் விருந்தாக்கி அதில் காசு சம்பாதித்துள்ளார்.
புதையல் ஆசையில் சப்பாணியுடன் செல்லுபவர்களிடம் நிர்வாணமாக இருந்து பூஜை செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும் எனக் கூறி, அதன்படி அவர்களும் நிர்வாணமாகவே பூஜையில் கலந்து கொள்வர்.
மந்திரங்கள் கூறியபின்னர் சாமி கும்பிட கண்களை அவர்கள் மூடும் போது கல்லை தூக்கிப் போட்டு அவர்களை கொலை செய்துவிடுவாராம் சப்பாணி. இதன்பிறகு அவர்களிடமிருந்த பணம், நகை உள்ளிட்டவைகள் கொள்ளையடித்து விட்டு உடலையும் காட்டுப்பகுதியில் புதைத்து விடுவாராம். இதனால் சப்பாணி செய்த கொலைகள் யாருக்கும் தெரியவரவில்லை. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 8 பேரை அவர் இப்படி கொலை செய்துள்ளார்.
திருவெறும்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாயமானவர்கள், சப்பாணியால் கொலை செய்யப்பட்டவர்கள் கோகிலா (70), அற்புதசாமி (70), விஜய்விக்டர் (27), சத்தியநாதன் (45), பெரியசாமி (75), அ.தி.மு.க. கவுன்சிலர் குமரேசன் (50), தங்கதுரை (36), சப்பாணியின் தந்தை தேக்கன் (75) ஆகிய 8 பேரை அவர் கொன்று புதைத்தமை தெரியவந்தது. இதில் பலரின் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதனிடையே, மனைவி மோகனப்பிரியா கள்ளக் காதலனுடன் ஓடிவிட்டார். அவரையும் தேடி கொலை செய்யும் வெறியில் அலைந்து திரிந்திருக்கிறார் சப்பாணி.
இதனிடையேதான் தங்கதுரைக்கு நிர்வாண பூஜை செய்து கொலை செய்துள்ளார். இந்நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சப்பாணியின் இந்த வாக்குமூலத்துக்கு அப்பால் தங்கப் புதையலை தேடும் நரபலி கும்பலுக்காக இக்கொலைகளை அவர் செய்தாரா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதனிடையே, சப்பாணிக்கு துறையூர் அருகே, செல்லையா என்ற சாமியாருடன் தொடர்பு இருந்தமை தெரியவந்துள்ளது. அவரிடம் தான் குமரேசன், சப்பாணிக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.
தங்கதுரை கொலை செய்யப்பட்டபோது, அவர் சென்ற ஸ்கூட்டியில் மாலையும், பூஜை செய்ததற்கான அடையாளங்களும் இருந்துள்ளன.
இதனடிப்படையில், தங்கப் புதையல் எடுக்கும் ஆசையில், அனைவரையும் சப்பாணி நரபலி கொடுத்துள்ளாரா என்ற சந்தேகம், பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது. அவரை விசாரணை செய்ததில் திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன.
சப்பாணிக்கு, ஒரு அண்ணனும், தம்பியும் இருந்துள்ளனர். இதில், தம்பி தன் காதலி மோகனப்பிரியாவை வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். விபத்தில், தம்பி இறந்து விட, சில மாதங்கள் கழித்து, மோகனப்பிரியாவை, சப்பாணியே திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கள்ளக் காதலனுடன் ஓடிய மோகனப்பிரியாவுக்கு, கொலைகளில் தொடர்பு இருக்கலாம் என, பொலிஸார் அவரையும் தேடி விசாரணைக்கு உட்படுத்த உள்ளனர்.
இதற்கிடையே, தனலெட்சுமி என்ற பெண், உடல்கள் தோண்டி எடுக்கப்பட்ட இடத்துக்கு சென்று, மாயமான அவரது கணவர் சண்முகம் (55) 2013ஆம் ஆண்டு முதல் மாயமாகியுள்ளதாகவும், 8 பேரை புதைத்துள்ள தகவலை கேள்விப்பட்டு எனது கணவரையும் கொன்று புதைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆகவே இதுகுறித்து விசாரணை நடத்தி எனது கணவரை கண்டுபிடித்து தரவேண்டும் என கூறியுள்ளார். இதனால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






