புறாவொன்றை தாம் கைது செய்துள்ளதாக இந்திய பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எச்சரிக்கை விடுக்கும் குறிப்பொன்றை இப்புறா சுமந்து சென்றமையே இதற்குக் காரணம்.
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள பதான்கோட் நகரில் இப்புறாவை இந்திய எல்லைக் காவல் படையினர் ஞாயிறன்று மாலை கண்டுபிடித்தனர் என பதான் கோட் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ராகேஷ் குமார் நேற்று தெரிவித்துள்ளார்.
இப்புறா சுமந்து சென்ற குறிப்பில் “மோடி, நாம் 1971 இல் இருந்தவர்களைப் போன்றவர்களல்ல. இப்போது, ஒவ்வொரு குழந்தையும் இந்தியாவுக்கு எதிராக போராடுவதற்குத் தயாராக இருக்கிறது” என உருது மொழியில் எழுதப்பட்டிருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1971 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இறுதியாக முழு அளவிலான போர் நடைபெற்றது.
அப்போரில் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்த இலட்சக்கணக்கான பாகிஸ்தான் படையினர் சரணடைந்ததுடன், கிழக்குப் பாகிஸ்தான் ஆனது பங்களாதேஷ் எனும் சுதந்திர நாடாகியமை குறிப்பிடத்தக்கது.
“இந்த எச்சரிக்கைக் குறிப்பானது பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லக் ஷர் ஈ தெய்பா எனும் ஆயுதக் குழுவினால் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தென்படுகிறது. எனவே நாம் இவ்விடயம் தொடர்பில் தீவிரமாக விசாரணை செய்கிறோம்” எனவும் இன்ஸ்பெக்டர் ராகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினரால் பறக்க விடப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட புறாவொன்றை இந்திய பொலிஸார் கைப்பற்றியதுடன், அப்புறாவுக்குள் உளவு கெமரா இருக்கலாம் என்ற சந்தேகத்தில் எக்ஸ் ரே சோதனையும் நடத்தப்பட்டது.
2013 ஆம் ஆண்டில் சிறிய கெமராவொன்று பொருத்தப்பட்ட நிலையில் உயிரிழந்த வல்லூறு ஒன்றை இந்திய பாதூகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.






