உலகின் அதிவேக மனிதன் உசேன் போல்ட் ஓய்வு பெற முடிவு!!

422

Usain-Bolt

உலகின் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் என்ற சிறப்புக்குரியவர் ஜமைக்காவின் உசேன் போல்ட். 27 வயதான உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் இதுவரை 6 தங்கமும், உலக தடகளத்தில் 8 தங்கம் உள்பட 10 பதக்கங்களும் அள்ளியுள்ளார்.

100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையும் படைத்துள்ளார். தடகள வரலாற்றில் ஜாம்பவான் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ள உசேன் போல்ட் 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு விடைபெற முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

நாளை நடைபெறும் டைமன்ட் லீக் போட்டியில் பங்கேற்பதற்காக பெல்ஜியம் சென்றுள்ள அவர் பிரஸ்செல்ஸ் நகரில் நேற்று அளித்த பேட்டியின் போது கூறியதாவது,

2016ம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற வேண்டும் என்பதே எனது திட்டமாகும். நான் நல்ல உடல்தகுதியுடன் இருந்தால், அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு சென்று, அதில் நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன்.

ஒலிம்பிக்கில் மேலும் தங்கப் பதக்கங்களை வென்றதுடன் ஓய்வு பெறுவதே சரியான தருணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். முகமது அலி (குத்துச்சண்டை), பீலே (கால்பந்து) ஆகியோர் போன்று நானும் தலைச்சிறந்த வீரராக இருக்க வேண்டும் என்று விரும்பினால் ஓய்வு பெறும் வரை தடகளத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று போல்ட் கூறினார்.