இத்தாலியை உலுக்கிய நிலநடுக்கம்!!

250

italy

மத்திய இத்தாலியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. மார்ச்சே மற்றும் அம்ப்ரியா பிராந்தியங்களில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியிருந்தது. தெற்கு இத்தாலியின் சில பகுதிகளிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் மத்திய இத்தாலியில் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பயந்துபோன பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசரம் அவசரமாக வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். குறிப்பாக உஸ்சிதா நகரில் கடும் சேதம் ஏற்பட்டது. மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.

உஸ்சிதா நகரில் தேவாலயம் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் கடுமையாக சேதம் அடைந்திருப்பதாகவும், கணக்கெடுப்பு முடிந்த பிறகே சேதமடைந்த கட்டிடங்களின் முழு விவரம் தெரியவரும் என்றும் நகர மேயர் கூறியதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது மலை கிராமம் ஒன்று முற்றிலும் அழிந்தது. அதனை சுற்றியுள்ள நகரங்களும் கடும் பாதிப்புக்குள்ளானது. இதில் சுமார் 300 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.