இந்தியாவைச் சேர்ந்த சேர்ந்த வர்த்தகரான சவ்ஜி தோலாக்கியா தனது ஊழியர்கள் 1716 பேருக்கு சுமார் 400 வீடுகள், 1,260 கார்கள் மற்றும் நகைகளை தீபாவளி போனஸாக வழங்கியுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரியான சவ்ஜி தோலாக்கியா ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவர் பல வருடங்களாக தனது தொழிலாளர்களுக்கு அசத்தலான தீபாவளி போனஸ் வழங்கி வருகிறார்.
கடந்த ஆண்டு இவர் தன் ஊழியர்களில் 491 பேருக்கு 491 கார்களை தீபாவளி போனஸாக வழங்கினார். 200 பேருக்கு வீடுகளை வழங்கினார். தற்போது இந்நிறுவனத்தில் சுமார் 5,500 பேர் பணியாற்றுகின்றனர்.
இவர்களில் 1,716 ஊழியர்கள் சிறந்த ஊழியர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். மேற்படி 1716 பேரில் 400 பேருக்கு தலா ஒரு வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 1260 பேருக்கு தலா ஒரு கார் வழங்கப்பட்டுள்ளது. ஏனையோருக்கு நகைகள் வழங்கப்பட்டன.
குஜராத்தில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள துதாலா கிராமத்தைச் சேர்ந்த தோலாக்கியா தனது மாமாவிடம் இருந்து கடன் பெற்று வைரத் தொழிலில் இறங்கியுள்ளார்.
1992 ஆம் ஆண்டு ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை அவர் ஸ்தாபித்தார். திடீரென அவர் கோடீஸ்வரராகவில்லை. தனது கடின உழைப்பின் மூலம் அவர் பெரும் வர்த்தக நிறுவனத்தை கட்டியெழுப்பினார்.
தனது ஊழியர்களுக்கு வெகுமதிகளை வாரி வழங்குவதால் இவரை ஓர் ஊதாரி எனக் கருதிவிடக்கூடாது.
உழைப்பின் அருமையை தனது மகனும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தனது மகன் திரவியாவுக்கு 3 செட் ஆடைகள் மற்றும் 7,000 இந்திய ரூபா மாத்திரம் கொடுத்து கேரளாவுக்கு சென்று ஏதேனும் தொழில்புரிந்து தேவையான பணத்தை சம்பாதித்து வாழுமாறு அவர் அனுப்பி இருந்தார்.
இதன்போது, திரவியா தனது புதல்வர் என்பதை யாரிடமும் கூறக்கூடாது எனவும் சவ்ஜி தோலக்கியா அறிவுறுத்தியிருந்தாராம்.
இவ்வருடம் தனது ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் குறித்து சவ்ஜி தோலக்யா செய்தியாளர்களிடம் பேசும்போது, ”இந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய 1,716 தொழிலாளர்களை தேர்ந்தெடுத்தோம்.
ஏற்கெனவே கார்கள் வைத்துள்ளவர்க ளுக்கு வீடு வழங்க முடிவு செய்தோம். வீடு வேண்டாம் என்றவர்களுக்கு கார்கள் வழங்கினோம்” என்றார்.
”தொழிலாளர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ள 400 வீடுகளும் தலா 1,100 சதுர அடி கொண்டவை. ஹரி கிருஷ்ணா வைர ஏற்றுமதி நிறுவனத்தின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் வெறும் ரூ.15 லட்சத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதில் முதல் 5 ஆண்டு தவணை மாதம் 5 ஆயிரம் இந்திய ரூபாவை (சுமார் 10,750 இலங்கை ரூபா) நிறுவனமே செலுத்தும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மாதம் 11 ஆயிரம் இந்திய ரூபாவை பயனாளிகளான ஊழியர்கள் செலுத்தினால் போதும்” எனத் தெரிவித்தார்.
இந்த அன்பளிப்புகளின் மொத்த பெறுமதி சுமார் 50 கோடி இந்திய ரூபா (107 கோடி இலங்கை ரூபா) என மதிப்பிடப்பட்டுள்ளதாக சவ்ஜி தோலக்கியா தெரிவித்துள்ளார்.
20 வருடங்களுக்கு முன்னர் தனது ஊழியர்கள் மூவருக்கு வாகனங்களை தான் வழங்கியதாக தோலக்கியா தெரிவித்துள்ளார். அதன்பின் வருடாந்தம் ஊழியர்களுக்கு மேலும் மேலும் அதிக அன்பளிப்புகளை வழங்கி வருகிறார்.
70 இற்கும் அதிகமான நாடுகளுக்கு இரத்தினங்களை நாம் ஏற்றுமதி செய்கிறோம்.
ஆனால் எமது ஊழியர்களைவிட பெறுமதியானது எதுவும் இல்லை. இவ்வூழியர்களிடம் நாம் காணும் மகிழ்ச்சியையும் இதன் மூலம் நாம உணரும் மகிழ்ச்சியையும் விபரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.
எமது ஊழியர்களை நாம் மகிழ்ச்சியாக வைத்திருந்தால் இறைவன் எம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பார் என சவ்ஜி தோலக்கியா கூறுகிறார்.
எமது ஊழியர்களை நாம் மகிழ்ச்சியாக வைத்திருந்தால் இறைவன் எம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்’ என சவ்ஜி தோலக்கியா கூறுகிறார்.









