வவுனியா சாள்ஸ் விளையாட்டுக்கழகம் நடார்த்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி சர்ச்சைக்குரிய முறையில் முடிவு..!

484

வவுனியா மகாறம்பைகுளம் சாள்ஸ் விளையாட்டுக்கழகம் நடார்த்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடர் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

வவுனியாவின் பல முன்னணிக் கழகங்கள் பங்குபெற்றிய இச்சுற்றுத் தொடரின் இறுதிப்போட்டி இன்றைய தினம் சாள்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் பூந்தோட்டம் லயன்ஸ் விளையட்டுக்கழக அணியும் தவசிகுளம் செவ்வானம் விளையாட்டுக்கழக அணியும் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய செவ்வானம் அணி 10 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 56 ஓடங்களைப் பெற்றது. லயன்ஸ் அணி சார்பாக நிதர்சன், உஷாந்தன், தர்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களை கைப்பற்றினர்.

57 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த லயன்ஸ் அணி ஆரம்பத்தில் நிதானமாக துடுப்பெடுத்தாடியது. எனினும் செவ்வானம் அணியினரின் மிகச்சிறப்பான பந்துவீச்சு காரணமாக போட்டி மிக விறுவிறுப்பாக மாறியது.

இறுதி ஓவரில் 9 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பாடிய லயன்ஸ் அணியினர் முதல் 5 பந்துகளில் 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். இதனால் ஆட்டத்தின் கடைசிப்பந்தில் 3 ஓட்டங்களை பெறவேண்டிய நிர்ப்பந்தம் லயன்ஸ் அணியினருக்கு ஏற்றப்பட்டது.

இறுதிப் பந்தினை எதிர்கொண்ட லயன்ஸ் அணியின் சௌமியன் 2 ஓட்டங்களைப் பெற்றார். இதனால் போட்டி சமநிலையில் முடிவடைந்தாக அனைவரும் எதிர்பார்த்த வேளையில் கடைசிப் பந்தில் சௌமியன் ரன்அவுட் ஆனதாக போட்டி நடுவர் திடீரென அறிவித்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த லயன்ஸ் அணியினர் நடுவரின் முடிவை ஏற்க மறுத்தனர். இதனால் மைதானத்தில் பலத்த சலசலப்பு ஏற்பட்டது.

நடுவர்களின் தீர்ப்பை ஏற்க மறுத்த லயன்ஸ் அணியினர், மைதானத்தை விட்டு வெளியேறியதுடன் போட்டித் தொடரின் இரண்டாம் இடம் பெற்ற அணியினருக்கு வழங்கப்படும் கிண்ணத்தையும் ஏற்க மறுத்தனர். இப்போட்டியில் நடுவர்கள் ஒருபக்க சார்பாக நடந்து கொண்டதாக லயன்ஸ் அணியினர் குற்றம் சாட்டினர்.

இறுதியாக வழங்கப்பட்ட தீர்ப்பு மட்டுமன்றி போட்டி முழுவதும் பல தீர்ப்புகள் சர்ச்சைக்குரிய விதத்திலும் லயன்ஸ் அணிக்கு எதிரானதாகவும் வழங்கப்பட்டதாக லயன்ஸ் அணியினர் விசனம் தெரிவித்தனர்.

பலத்த சர்ச்சைகளுடன் நிறைவடைந்த இப்போட்டியில் செவ்வானம் அணியினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தொடரின் சம்பியன்ஸ் பட்டமும் வழங்கப்பட்டது.

வவுனியாவில் இதுபோன்ற சுற்றுத்தொடர்களில் இவ்வாறான சர்ச்சைகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், இனிவரும் காலங்களில் இடம்பெறும் போட்டிகளின் போது பக்கசார்பற்ற பொதுவான நடுவர்களை நியமிக்கவேண்டிது போட்டி ஏற்பாட்டாளர்களின் கடமையாகும்.

20130908_151650
20130908_151737

20130908_151828

20130908_151848

20130908_152549

20130908_155239

20130908_161852