கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி மத்திய வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பணம், தங்க ஆபரணங்கள் உட்பட சுமார் 4 ½ கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் நேற்று திங்கள் அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;
கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டின் உரிமையாளரான வர்த்தகர் தூரப் பயணமொன்றை மேற்கொண்டு அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார்.
அதன் பின்னர் அதிகாலை 4 மணியளவில் அவரும் அவரது மனைவி, பிள்ளைகள் உட்பட அனைவரும் உறக்கத்தில் இருந்த வேளை வீட்டின் வெளிப்புற யன்னல் கம்பியை கழற்றி விட்டு நுழைந்த கொள்ளையர்கள் வீட்டு அலுமாரியை உடைத்து அதனுள்ளிருந்த மாணிக்கக் கற்கள், பணம், நகை மற்றும் வீட்டிலிருந்த கையடக்கத் தொலைபேசி என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
காலை 6 மணிக்கே வீட்டார் எழுந்ததாகவும் அப்போது அலுமாரி திறக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்ததாகவும் அதைத் தொடர்ந்து பொலிஸ் அவசரப் பிரிவுக்கு அழைப்பை மேறகொண்டதாகவும் வீட்டார் தெரிவித்தனர்.
வீட்டார் உறங்கி எழுந்தவேளை அவர்களின் கண்களில் சற்று எரிவு இந்ததாகவும் ஒருவேளை கொள்ளையர்கள் மயக்க மருந்தைத் வீட்டினுள் விசிறிய பின் கொள்ளையில் ஈடுபட்டடிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது.
பணம் உட்பட ஏறக்குறைய 4 ½ கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் இக்கொள்ளைச் சம்பவத்தின் போது கொள்ளையிடப்பட்டுள்ளது.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை கல்முனைப் பொலிசாருடன் இணைந்து கல்முனைக் குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.