இலட்சக்கணக்கான மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள எமிரேட்ஸ் விமானம்!!

520

 
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயைத் தளமாகக் கொண்டு இயங்கும் விமானசேவை நிறுவனமான எமிரேட்ஸ், துபாயின் Miracle Garden உடன் இணைந்து இலட்சக்கணக்கான மலர்களால் ஆன எமிரேட்ஸ் A 380 எனும் மாதிரி விமானத்தை வடிவமைத்துள்ளது.

துபாயின் பாலைவன சோலையென வர்ணிக்கப்படும் Miracle Garden இல் மலர்களால் ஆன வாகன வடிவமைப்பு, ஆண்டுதோறும் இடம்பெற்றாலும், பிரம்மாண்ட மாதிரி விமானம் உருவாக்கப்பட்டுள்ளமை இதுவே முதல்முறையாகும்.

எமிரேட்ஸ் விமான நிறுவனத்திடமிருந்து A 380 விமானத்தின் மாதிரி வரைபடம் பெறப்பட்டு, அதனை அடிப்படையாக வைத்து 200 பணியாளர்களைக் கொண்டு, இரும்புக் கம்பிகள் மூலம் வெளிப்புற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

முதலில் செடி கொடிகள் வளர்வதற்கு ஏற்ற சூழல் ஏற்படுத்தப்பட்டு, தாவரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன.

இந்த விமானம் முழுவதும் 7 வகையான இனங்களைக் கொண்ட 5 இலட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் இலச்சினையை மாத்திரம் உருவாக்க ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மலர்களும் தாவரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

80.27 மீற்றர் அகலத்திலான மிகப்பெரிய விமான இறக்கைகளின் அலங்கரிப்பிற்கு ஒரு இலட்சம் வரையான மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு நிஜ விமானத்தின் எடை 500 டன்களாகும். இந்த மலர் விமானம் 100 டன் எடையுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளது.

180 நாட்களாக 200 பேர் இணைந்து நாளொன்றுக்கு 10 மணித்தியாலங்களைச் செலவிட்டு உருவாக்கியுள்ள இந்த கண்கவர் விமானத்தைப் பார்வையிட, இம்முறை ஆயிரக்கணக்கான மக்கள் Miracle Garden ஐ நோக்கிப் படையெடுப்பார்கள் என நம்பப்படுகிறது.

இந்த விமானத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களை மீள்சுழற்சி செய்ய முடியும் என்பது ஆறுதல் தரும் விடயமாகும். நவம்பர் 27 ஆம் திகதி முதல் இந்த விமானம் பொதுமக்கள் பார்வையிட திறந்துவைக்கப்படவுள்ளது.

f1 f2 f3 f4